வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (08/03/2018)

கடைசி தொடர்பு:12:00 (08/03/2018)

ஹெச்.ராஜாவின் காட்டுமிராண்டித்தனம்! ரஜினிகாந்த் காட்டம்

பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்றதும், அதை உடைத்ததும் கண்டிக்கத்தக்கது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதற்குக் கருத்து தெரிவித்த பா.ஜ.க தேசியச் செயலாளர்
ஹெச்.ராஜா  'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை' எனத் தனது
முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.  ஹெச்.ராஜாவின் இந்தக் கருத்து மிகப்பெரும் சர்ச்சையாக மாறியது. அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் ஹெச்.ராஜாவின் கருத்திற்குக் கண்டனம் தெரிவித்தனர். இவரின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழகத்தில் பல போராட்டங்களும் நடைபெற்றன.

அவரின் பதிவைத் தொடர்ந்து வேலூரில் உள்ள பெரியார் சிலை நேற்று முன் தினம் சில மர்ம கும்பலால் உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து எழுந்த சர்ச்சையின் காரணமாக ஹெச்.ராஜா பதிவிட்ட முகநூல் கருத்து நீக்கப்பட்டது.  ''ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவை என் அட்மின் எனது அனுமதி இன்றி பதிந்துள்ளார். அதனால்தான் நான் அதை நீக்கிவிட்டேன். இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதயப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்''  என ஹெச், ராஜா தெரிவித்திருந்தார். அரசியல் தலைவர்கள் அனைவரும் பெரியார் சிலை தொடர்பாகத் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ளார். இன்று அவரது இல்லத்திலிருந்து புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற கருத்தும், அவரின் சிலை உடைக்கப்பட்டதும் காட்டுமிராண்டித்தனமான செயல் எனத்
தெரிவித்துள்ளார்.