வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (08/03/2018)

கடைசி தொடர்பு:12:40 (08/03/2018)

சந்தையில் விற்கப்படும் ரசாயனப் பழங்கள்! மக்களுக்கு அலெர்ட் கொடுத்த அதிகாரிகள்

திருவாரூர் மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனைசெய்யப்படும் பழங்களில், அவை நீண்ட நாள்களுக்குக் கெடாமல் இருக்க ரசாயனம் கலக்கப்படுவதாக, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ரசாயன பழம்- அதிகாரிகள்

முன்பெல்லாம், பழங்களை கொடாப்பில் போட்டு பழுக்கவைப்பார்கள். அதுதான் ஆரோக்கியமானது. கடந்த 10-20 ஆண்டுகளாக, அவசர யுகம் என்ற பெயரிலும் சீக்கிரத்தில் லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற பணத்தாசையாலும் வியாபாரிகள், வாழைக்காய்களில் ரசாயனக் கற்களைப் போட்டு பழுக்கவைக்கும் அவலம் உருவானது. அதன் அடுத்தகட்டமாக, காய்கள் மரத்தில் இருக்கும்போதே சீக்கிரம் முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, ரசாயனக் கலவை தெளித்தார்கள். தற்போது உச்சகட்டமாக, பழங்கள் நீண்ட நாள்களுக்குத் தரம் குறையாமல் இருக்க, ரசாயனக் கலவை தெளிக்கும் கொடுமை தொடங்கியுள்ளது.

குறிப்பாக, திருவாரூர் மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பழங்களில், இதுபோன்ற கொடுமை நிகழ்வதாக தமிழ்நாடு பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பழங்களை சாப்பிட்டால், பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் எனவும்  எச்சரிக்கைசெய்துள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பழங்களை வாங்கிச்செல்ல தயங்குகிறார்கள். எந்தக் கடையில் கெமிக்கல் தெளிக்காத பழம் கிடைக்கும் என குழம்பித் தவிக்கிறார்கள். இதுதொடர்பாக, சுகாதார அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ''எது நல்ல பழம் என எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும்'' என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.