வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (08/03/2018)

கடைசி தொடர்பு:13:00 (08/03/2018)

திருவாரூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்திய- மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

விமான நிலையம்

''முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் இடம்பெற்றது. மாவட்டத் தலைநகர் தஞ்சாவூர் என்பதாலும் தஞ்சாவூர் நகரத்திலிருந்து மிக நீண்ட தூரத்தில் திருவாரூர் மற்றும் இதன் சுற்றுவட்டார ஊர்கள் இடம்பெற்று இருந்ததால், இவை வளர்ச்சி அடையாமல் நீண்டகாலமாக பின் தங்கியே இருந்தது. அடிப்படை வசதிகள் பெறுவதற்குக்கூட தஞ்சாவூர் வந்து மனு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. திருவாரூர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, திருவாரூர் மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக, 2006-11-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இங்கு மத்திய பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். இப்பல்கலைக்கழகம் வளர்ச்சி அடைய நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு எளிதாக வந்து செல்ல திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்'' என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ''விமானம் நிலையம் அமைக்கப்பட்டால், திருவாரூர், நாகப்பட்டினம் மக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வரவும் உதவியாக இருக்கும். திருவாரூர் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லவும் வசதியாக இருக்கும்'' என்கிறார்கள்.