'காவலர் பாரதிக்கு விடுப்பு கொடுக்கப்பட்டதா?'- நீண்ட விளக்கம் அளித்த துணை கமிஷனர்

போலீஸ்

'போலீஸ் வேலை எனக்குப் பிடிக்கவில்லை' என்று முகநூல் வீடியோவில் பேசிய காவலர் பாரதியின் குமுறலுக்கு, போலீஸ் உயரதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பாரதி என்ன சொன்னார்?  "என் பெயர் பாரதி. சொந்த ஊர் மதுரை. இப்போது நான், சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கிறேன். சில நாள்களுக்கு முன், என் மகனுக்கு  காலில் அடிபட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது. விடுப்பு கேட்டு இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன், மறுத்தார். பின்னர் உதவி கமிஷனர்,  துணை கமிஷனர் என்று ஒவ்வொருவராகப் போய்ப் பார்த்தேன், அனைவருமே மறுத்தனர்.  விடுப்பு கிடைக்கவில்லை. நானே 10 நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய் மகனைப் பார்த்துவிட்டு, பணிக்கு வந்தேன். 'உனக்கு இங்கு வேலை இல்லை' என்று சொல்லிவிட்டார்கள். மற்ற காவலர்கள் போல சுட்டுக்கொண்டு சாகாமல், ஊருக்குப் போய் விவசாயம் செய்தோ அல்லது கடை வைத்தோ நான் பிழைத்துக் கொள்கிறேன்" இவ்வாறு காவலர் பாரதி, அந்த வீடியோவில் பேசியிருந்தார். போலீஸ் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை உண்டு பண்ணியது. பெரிய அளவிலும் விவாதிக்கப்பட்டது.  இந்நிலையில், மவுண்ட் போலீஸ் துணை கமிஷனர் எம்.எஸ்.முத்துசாமி, இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

பாதுகாப்புப் பணியில்   போலீஸார்

"பாரதி என்பவர், இரண்டாம் நிலைக் காவலராக சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்தார். இவர், ஒரு வீடியோவை முகநூலில் பதிவுசெய்துள்ளார். அந்த வீடியோவில், தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுப்பு கேட்டதாகவும், பலமுறை கேட்டும் விடுப்பு மறுக்கப்பட்டதால், போலீஸ் வேலையை விட்டுவிட்டு கடை வைத்து பிழைத்துக்கொள்வதே மேல் என்று சொல்வதாகவும் ஒரு பொய்யான செய்தியைப் பரப்பியுள்ளார். காவலர் பாரதி 28.12.2017 அன்று, ஆய்வாளரிடம் தற்செயல் விடுப்பு கோரியுள்ளார். ஆனால், அரசால் அனுமதிக்கப்பட்ட 12 நாள்கள் தற்செயல் விடுப்பையும் 7 நாள்கள் அனுமதி விடுப்பையும் அவர் ஏற்கெனவே எடுத்துவிட்ட காரணத்தால், மேற்கொண்டு அவருக்கு தற்செயல் விடுப்பு வழங்க வாய்ப்பில்லை. எனினும், தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்துக்காக விடுப்புக் கேட்டதால், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், காவலர் பாரதிக்கு 28.12.2017 அன்று மருத்துவ விடுப்புக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

மருத்துவ விடுப்பில் சென்ற பாரதி, மருத்துவ விடுப்பை முடித்தும் காவல்நிலையத்துக்கு பணிக்கு வராமல் இருந்துள்ளார். 21 நாள்களுக்கு மேல் தொடர்ந்து பணிக்கு (அறிக்கை செய்யாமல்) வராமல் இருந்ததால், காவல்துறை நடைமுறை ஆணை 95(1) -ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் ந.க.எண்.விடுப்பு (தெ)/90/1136/2018, தெ.ம.ஆணை எண்.52/2018, நாள் 22.01.2018 விட்டோடியாக அறிவிக்கப்பட்டார். அந்த ஆணையை அவரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் அலுவலக தொடர்புக்காக குறிப்பிட்டிருந்த காஞ்சிபுரம் வீட்டு முகவரி தவறு எனத் தெரியவந்தது. மேலும்,  2 ஆண்டுகளுக்கு முன்பே தனது வாடகை வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றதாகவும், கிராம நிர்வாக அலுவலர் 20.02.2018 அன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தற்போது அவர் எங்கு வசித்துவருகிறார் என்கிற விவரம் தெரியவில்லை. காவலர் பாரதி, 28.12.2017 அன்று விடுமுறை கேட்டபோது, அவருக்கு உரித்தான தற்செயல் விடுப்பு இல்லாத சூழ்நிலையிலும் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ விடுப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, காவலர் பாரதி தனது முகநூலில் கூறியுள்ளவை உண்மைக்குப் புறம்பானவை" என்று விளக்கமளித்துள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!