வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (08/03/2018)

கடைசி தொடர்பு:16:26 (08/03/2018)

`33 சதவிகித மகளிர் இடஒதுக்கீடுக் கனவை நிறைவேற்ற சூளுரை ஏற்போம்' - திருநாவுகரசர் மகளிர் தின வாழ்த்து

உலக மகளிர் தினமான இன்று, 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு கனவை நிறைவேற்ற சூளுரை ஏற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் மகளிர் தினத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் ஆகியவற்றில் உலக அரங்கில் சாதனைகளை நிகழ்த்துகிறவர்களை போற்றுகிற வகையிலும், பெண்களின் சமஉரிமையை காப்பாற்றுகிற வகையிலும் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் நாள் உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக பெண்களின் உரிமைக்காக  பலர் போராடி வந்தாலும் இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீதம் இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்கப்பட வேண்டுமென சோனியா காந்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மத்திய பா.ஜ.க. அரசு மகளிர் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றாத காரணத்தால் மகளிர்
இடஒதுக்கீடு கனவாகவே இருந்து வருகிறது.  ஏற்கனவே பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா அமைப்புகளில் அன்று பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி எடுத்த முயற்சியின் காரணமாக 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இன்று 50 சதவீதமாக சில மாநிலங்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு என்கிற கனவை நிறைவேற்றுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க உலக மகளிர் தினத்தில் சூளுரை ஏற்போம். உலக மகளிர் தினத்தில் அனைத்து மகளிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.