வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (08/03/2018)

கடைசி தொடர்பு:16:24 (08/03/2018)

80 வயது மூதாட்டியைக் குடும்பத்துடன் சேர்த்துவைத்த ஈர நெஞ்சம்... மகளிர் தினத்தில் நடந்த உருக்கம்!

கோவையில், 80 வயது மூதாட்டியை மீட்டு, அவர்களது குடும்பத்துடன் இணைத்து வைத்துள்ளது ஈரநெஞ்சம் அறக்கட்டளை.

ஈரநெஞ்சம்

கோவையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் பகுதிகளில், காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையமும் ஒன்று. அதன் அருகில் ஒரு குப்பைக் கிடங்கு உள்ளது. அதன் அருகில்தான், சபீரா என்ற 80 வயது பாட்டி முடங்கிக் கிடந்துள்ளார். இதையடுத்து, அந்தப் பாட்டி போலீஸார் உதவியுடன் மீட்கப்பட்டு, ஆர்.எஸ்.புரத்தில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள, மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். சற்றே ஞாபக மறதியில் இருந்த சபீரா பாட்டி, பின்னர், தான் ஊட்டியில் வசித்து வந்ததாகவும், கோவையில் தனக்கு ஆயிஷா என்ற மகள் இருந்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில், அந்தப் பாட்டியின் படம் மற்றும் தொடர்பு எண்ணுடன் முகநூலில் ஒரு பதிவு போடப்பட்டது.

இந்தத் தகவல் சபீரா பாட்டியின் மகள் ஆயிஷாவுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, இன்று காலை ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குச் சென்ற ஆயிஷா, தனது தாயைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பின்னர், தன் தாயை மீட்டுக் கொடுத்ததற்காக, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ஈரநெஞ்சம்

இதுகுறித்து ஆயிஷா கூறுகையில், “என் அம்மா சற்று மனநிலை பாதித்தவர். குன்னூரில் உள்ள என் சகோதரரின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். அதன்பிறகு எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பிரயோஜனம் இல்லை. பின்னர், ஈரநெஞ்சத்தின் முகநூல் பதிவு மூலம்தான் அம்மாவைக் கண்டறிந்தோம். ஈரநெஞ்சத்துக்கு மிக்க நன்றி” என்றார்

இதுகுறித்து ஈரநெஞ்சம் அமைப்பின் மகேந்திரன் கூறுகையில், "சில நாள்களாகவே அந்தப் பாட்டி அங்கேதான் இருந்துள்ளார், சில மக்கள் அவரைத் துரத்திவிட்டுள்ளனர். இதனால் முட்புதருக்குச் சென்று முடங்கியுள்ளார். இதையடுத்துதான், போலீஸாரின் உதவியுடன் மீட்டு அவரை காப்பகத்துக்குக் கொண்டுவந்தோம்" என்றார்