தாமிரபரணி நதியை 3-ம் கட்டமாகச் சுத்தப்படுத்தும் பணிக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

தாமிரபரணி நதியை மூன்றாம் கட்டமாக சுத்தப்படுத்துவது தொடர்பாக அரசு அலுவலகர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவன அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தாமிரபரணி ஆலோசனைக் கூட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவன அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற தாமிரபரணி தூய்மைப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ‘’நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளை சுத்தப்படுத்தி, தூய்மைப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர் சங்கங்கங்களின் பிரதிநிதிகள், தன்னார்வலர்களைக் கொண்டு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. 

அதன் மூலம் நதியின் சுற்றுப்புறப் பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன. தற்போது மூன்றாம் கட்டமாக தாமிரபரணி நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மார்ச் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 9-ம் தேதியன்று ஆற்றின் கரைப் பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், புதர் செடிகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவை இயந்திரங்கள் மூலம் அகற்றப்படும். 

மார்ச் 10-ம் தேதி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். நெல்லை தாமிரபரணி ஆற்றை 68 பகுதிகளாகப் பிரித்து தூய்மைப்படுத்தும் பணிகளைச் செய்ய உள்ளோம். இதில் 23 கலைக்கல்லூரிகள், 19 பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 42 கல்லூரிகளும் பல்வேறு தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். தாமிரபரணி நதியின் கரையோரம் வசிக்கும் மக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி அவர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்துவதுடன், நதியைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், உதவி ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பழனி, வருவாய் கோட்டாட்சியர்கள் மைதிலி, .ராஜேந்திரன், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் முனைவர் சத்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!