வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (08/03/2018)

கடைசி தொடர்பு:14:16 (08/03/2018)

` ராஜாவுக்கு சிலவற்றைப் புரியவையுங்கள்!'    - டெல்லி தலைமையிடம் கொந்தளித்த தமிழிசை

தமிழிசை

' தமிழக பா.ஜ.க-வில் நான் சொல்வது மட்டும்தான் கருத்து' என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். ' ஹெச்.ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். எதிர்மறை அரசியல் எடுபடாது என்பதை அவருக்குப் புரிய வையுங்கள் என அகில இந்தியத் தலைமையிடம் வலியுறுத்தியிருக்கிறார் தமிழிசை' என்கின்றனர், பா.ஜ.க நிர்வாகிகள். 

'திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதைப் போல, தமிழகத்தில் பெரியார் சிலைகளும் தகர்க்கப்படும்' என ஹெச்.ராஜாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. அவருடைய இந்தக் கருத்து, தமிழக அரசியல் களத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. 'சிலை மீது கை வைத்தால் கை, கால்களை வெட்டுவோம்' எனக் கொந்தளித்தார் வைகோ. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், ' பெரியார் சிலையை உடைப்போம் என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சை ஏற்க முடியாது' எனக் கண்டித்தார். ராஜாவின் பேச்சைக் கண்டித்து, நேற்று தி.மு.க உள்பட அரசியல் கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தின. இதன் விளைவாக, தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் ராஜா. ' எனக்குத் தெரியாமல் ஃபேஸ்புக் அட்மின் இப்படிச் செய்துவிட்டார். கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே, இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால், அதற்கு என் இதயபூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். 

ஹெச்.ராஜாஅதேநேரம், ராஜாவின் கருத்தை முன்வைத்து தமிழக பா.ஜ.க-வுக்குள் மிகப் பெரும் மோதல் வெடித்துக் கொண்டிருக்கிறது. காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழிசை, இதுகுறித்து ஹெச்.ராஜாவுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. ' தன்னுடைய மாவட்டத்தில் தமிழிசை மட்டும் கலந்து கொண்டால், தனக்கு இருக்கும் மரியாதையும் போய்விடும்' என்பதால், தமிழிசையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராஜா. பெரியார் விவகாரம் கொந்தளிப்பை உருவாக்கியிருப்பது குறித்து, அமித் ஷாவின் கவனத்துக்கு விரிவான தகவலைக் கொண்டுசென்றிருக்கிறார் தமிழிசை. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், " தமிழக பா.ஜ.க மீது பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் உருவாகிக்கொண்டே போகிறது. இதன்விளைவாக, பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் அளவுக்கான சம்பவங்கள் நடந்து வருகின்றன. பெரியார் குறித்து இப்படியொரு கருத்தை ராஜா பதிவிட்டிருக்கக் கூடாது. இதைப் பற்றி தமிழிசையிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள், ' ராஜா மீது கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள். அப்போதுதான் உங்கள் தலைமையின்மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை வரும்' எனக் கூறியுள்ளனர். 

இதனையடுத்து, அமித் ஷாவைத் தொடர்புகொண்டு பேசிய தமிழிசை, ' அரசியலுக்கு அப்பாற்பட்டவர் பெரியார். அவர்மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம். அவர் ஒரு மறைந்த தலைவர். அவரை விமர்சனம் செய்வதால், பா.ஜ.க-வுக்கு எந்த லாபமும் வரப்போவதில்லை. பெரியார் பெயரை முன்வைத்து, அனைத்து சமுதாய வாக்குகளையும் ஜெயலலிதா பெற்றுவந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அந்த வாக்குகள் அனைத்தும் நம்பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கட்சிக்கு நல்லது நடக்க வேண்டும் என நினைத்து உழைத்தால், சிலர் இப்படிப் பேசியே கெடுக்கிறார்கள். ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டாம் எனச் சொல்லியும் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்' எனக் கூற, ' ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா?' எனக் கேட்டிருக்கிறார் அமித் ஷா. ' ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். எதிர்மறை அரசியல் இங்கு எடுபடாது என்பதை அவருக்குப் புரியவைத்தால் போதும். சிலை விவகாரத்தில் தலைமையின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கலாம்' எனத் தெரிவித்தார். அதன்பின்னரே, சிலை உடைப்பு விவகாரம்குறித்து பா.ஜ.க தலைமை தன்னுடைய கருத்தைத் தெரிவித்தது" என்றார் விரிவாக. 

" தமிழக பா.ஜ.க-வின் தலைமைப் பொறுப்பிலிருந்து தமிழிசையை நீக்க வேண்டும் என ஒரு சிலர் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு எதுவும் நிறைவேறவில்லை. தமிழிசை மீது டெல்லி மேலிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆளுக்கு ஆள் கருத்து கூற வேண்டாம் என தமிழக பா.ஜ.க-வின் சில நிர்வாகிகளுக்குத் தெரிவித்துவிட்டனர். ராஜாவை அழைத்தும் எச்சரித்துள்ளனர். பெரியார் விவகாரத்தால் தமிழிசையின் அதிகாரம் கூடியிருக்கிறது" என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர். 
 


டிரெண்டிங் @ விகடன்