`இன்ஸ்பெக்டர் காமராஜை பணிநீக்கம் செய்க' - உஷாவுக்கு நீதிகேட்டு தொடரும் போராட்டம்

திருச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளரை நிரந்தர பணிநீக்கம் செய்ய
வேண்டும் எனக் கூறி உஷாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெறுகிறது.

நேற்று திருச்சியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா, உஷா என்ற தம்பதியைப் போலீஸார் நிறுத்தியுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாததால் அந்தத் தம்பதியினர் நிற்காமல் சென்றுள்ளனர், அவர்களைத் துரத்திச் சென்ற போலீஸார் ஓர் இடத்தில் மடக்கிப் பிடித்துள்ளார். அதில் காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் வண்டியை உதைத்துள்ளார்.இதில், நிலை தடுமாறி ராஜாவும் அவரின் மனைவியும் கீழே விழுந்தபோது அருகில் வந்த வேன் மோதி 3 மாத கர்ப்பிணியான உஷா உயிரிழந்தார். இந்நிலையில் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் திரண்டு போலீஸுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதையடுத்து, பொதுமக்களைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்தியது. இதில் ஏராளமானோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 

இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவல் ஆய்வாளரைக் கைது செய்ய வேண்டும் மற்றும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, உஷாவின் உடல் வைக்கப்பட்டுள்ள திருச்சி அரசு மருத்துவமனையில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை உயரதிகாரி,
கர்ப்பிணிப் பெண்ணின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். ஆனால், காவல் ஆய்வாளரை நிரந்த பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி, உயிரிழந்த கர்ப்பிணியின் உறவினர்கள் மற்றும் அரசியல்
கட்சியினர் அவரின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!