தற்கொலைக்கு முன் எஸ்.ஐ. சதீஷ்குமாரின் 2 மணிநேர உரையாடல்! - இளம்பெண்ணை வளைக்கும் சைபர் கிரைம் | Audio files of SI sathish Kumar, who committed suicide creates suspicion on a young lady

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (08/03/2018)

கடைசி தொடர்பு:15:42 (09/03/2018)

தற்கொலைக்கு முன் எஸ்.ஐ. சதீஷ்குமாரின் 2 மணிநேர உரையாடல்! - இளம்பெண்ணை வளைக்கும் சைபர் கிரைம்

சதீஷ்குமார்

அயனாவரம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ., சதீஷ்குமாரின் மரணத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. ' துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன், அவர் நீண்டநேரம் செல்போனில் பேசியிருக்கிறார். அவரது மரணத்துக்கும் அதுவே காரணமாக அமைந்துவிட்டது' என்கின்றனர் போலீஸார். 

திருவிடைமருதூர், மேலூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2011-ம் ஆண்டு தமிழகக் காவல்துறைக்கு நேரடி எஸ்.ஐ-யாகத் தேர்வு செய்யப்பட்டவர். பயிற்சிக்காலம் முடிந்த பிறகு, சேத்துப்பட்டு காவல்நிலையத்தின் குற்றப்பிரிவு எஸ்.ஐ-யாகப் பணியாற்றினார். அதன்பிறகு, அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ-யாக, கடந்த 2014-ம் ஆண்டு பதவிக்கு வந்தார். 33 வயதாகும் சதீஷ்குமாருக்கு இன்னமும் திருமணமாகவில்லை. உடனடியாக திருமணம் செய்துவைக்க, பெண் பார்க்கும் படலத்தையும் அவர் வீட்டில் தொடங்கியிருந்தனர். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குச் சென்ற சதீஷ்குமார், மீண்டும் ஸ்டேஷனுக்குள் வந்துள்ளார். அங்கிருந்த எஸ்.ஐ., சிரஞ்சீவியிடம், துப்பாக்கியை வாங்கியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில்... தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். எஸ்.ஐ-யின் தற்கொலை, காவல்துறை வட்டாரத்தை அதிரவைத்தது. அவரது உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்பட இருக்கிறது. சதீஷ்குமாரின் மரணத்துக்கு, காவல் உயர் அதிகாரிகள் அழுத்தம் ஒரு காரணம் என்ற தகவல் சொல்லப்பட்டது. இந்நிலையில், எஸ்.ஐ-யின் மரணம்குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், " எஸ்.ஐ-யின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீஸார் ஆய்வுசெய்தனர். 

அதில் பெரும்பாலான தகவல்கள், அவர் இறப்பதற்குமுன் அழிக்கப்பட்டிருந்தன. இது, சைபர் கிரைம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் பயன்படுத்திய செல்போனுக்கு கடைசியாக வந்த அழைப்புகள், அவர் பேசிய கால் விவரங்கள்குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அதில், இரவு 11 மணியிலிருந்து அவர் இறப்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன்புவரை நீண்ட நேரம் ஒரு செல்போன் நம்பரில் சதீஷ்குமார் பேசியிருப்பது தெரியவந்தது. அந்த செல்போன் நம்பர் யாருடையது என்று போலீஸார் விசாரித்தபோது, அது ஒரு பெண்ணின் செல்போன் நம்பர் எனத் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்குறித்த விவரங்களை ரகசியமாகச் சேகரித்துவருகிறோம்" என்றார். 

போலீஸ் பணியில் திறம்பட செயல்பட்ட சதீஷ்குமாருக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. ரவுடிகளை ஒழிப்பதிலும் தனிக்கவனம் செலுத்தினார். இதனால், உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெற்ற சதீஷ்குமார், எந்த குற்றவழக்கிலும் தனியொருவனாகவே செயல்பட்டுவந்துள்ளார். அவரது மரணம், அயனாவரம் பொதுமக்கள் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்