வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (08/03/2018)

கடைசி தொடர்பு:16:55 (08/03/2018)

`25,000 ஏக்கர் பயிர்கள் கருகுகின்றன; செத்து மடிய வேண்டுமா?’ - ஒலிக்கும் விவசாயிகளின் வேதனைக்குரல்

``அரியலூர் மாவட்டத்தில் கடும் வறட்சியால் 25,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் விவசாயிகளை செத்து மடிய வேண்டும் என்று நினைக்கிறதா?" என மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள். 

                                             விவசாயி

 

அரியலூர் மாவட்டத்தில், புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் விளாகம், கோயில் எசனை, இலந்தைக் கூடம், பளிங்காநத்தம், கரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஏரிகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அதன் மூலம் திருமானூர், முடிகொண்டான், கள்ளூர், விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி, சேனாபதி, ஏலாக்குறிச்சி, காமரசவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 25,000 ஏக்கர் சம்பா நடவு செய்யப்பட்டு, தற்போது நெற்கதிர் வரும் தருவாயில் உள்ள நிலையில், ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. நடவு செய்யப்பட்ட பயிர்கள் களை எடுத்த பருவத்தோடு தண்ணீர் இல்லாமல் கதிர் வந்தும் பாதி காய்ந்து நிலங்கள் வெடித்து பயிர்கள் நிற்கின்றன.

இந்த நிலையில் தற்போது புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீர் வராததால் புள்ளம்பாடி நம்பர் 1 வாய்க்கால் முதல் 6 நம்பர் வாய்க்கால் வரை முற்றிலும் கருகும் நிலையில் உள்ளது. மேற்கண்ட பகுதி விவசாயிகள் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் புள்ளம்பாடி பகுதிக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் கருகும் நிலையில் உள்ள பயிர்களைப் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்பிப்பதாகவும் விரைவில் பாசன தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துச் சென்றனர். 

                             நெற்பயிர்- விவசாயி

சண்முகசுந்தரம்ஆனால், பயிர்களைக் காப்பாற்ற மார்ச் மாதம் முழுவதும் தண்ணீர் வந்தால்தான் காப்பாற்ற முடியும். விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இன்று வரையிலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வேதனை.
இது குறித்து மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் சண்முகசுந்தரத்திடம் பேசியபோது, "கடந்த ஆண்டு வாய்க்காலில் தண்ணீர் வராததால்  புள்ளம்பாடி பகுதி நிலங்கள் தரிசாகக் கிடந்தன. தற்போது சீரமைத்து  நாற்றாங்கால் செப்பனிட்டு நடவு செய்யப்பட்டு வாய்க்காலில் தண்ணீர் வரும் நிகழாண்டு விவசாயம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஏக்கருக்கு ரூ. 25,000 செலவு செய்துள்ளோம். தற்போது கதிர் வரும் தருவாயில் தண்ணீர் இல்லாததால், கடந்த 20 நாள்களுக்கும் மேலாகப் பயிர்கள் காய்ந்து வருகிறது. கரைவெட்டி ஏரி மற்றும் சில பாசன ஏரிகளில் குறிப்பிட்ட அளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்தத் தண்ணீர் பறவைகள் மற்றும் மீன்களுக்காகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கடும் வறட்சியால் அரியலூர் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தார்கள். அதே நிலைக்கு தள்ளிவிடாமல் இருந்தால் சரி. மத்திய-மாநில அரசுகள் அவர்களின் அரசியல் சுயலாபத்துக்காக விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடாமல் விவசாயிகளைக் கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்க வழிவகை செய்ய வேண்டும். கருகும் பயிர்களைக் காப்பாற்ற மார்ச் மாதம் முழுவதும் புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்" என்று வேதனையுடன் கூறினார்.