பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்!

உதவிப் பேராசிரியர் பணிக்கு லஞ்சம் வாங்கி கைதான, கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கணபதி

உதவிப் பேராசிரியர் பணிக்கு லஞ்சம் பெற்றதற்காக, பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு இடைத்தரகராகச் செயல்பட்ட வேதியியல் துறைப் பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தொலைதூரக் கல்வி இயக்குநராக இருந்த மதிவாணன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, துணைவேந்தர் பொறுப்பில் இருந்து கணபதியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பணியிடை நீக்கம் செய்தார். இதனிடையே, கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீஸார், கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். இதனிடையே, ஜாமீன் கேட்டு, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கணபதி, இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, கணபதி தரப்பில் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

"தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டபோது, தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் கிடைக்காததால் சாட்சிகளை மிரட்டுவதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை" என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், சொல்ல முடியாத துயரத்துக்கும் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டுள்ளதாகவும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக,
ஜாமீன் வழங்கினால் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து தப்பப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், காவல் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போதுமான காலங்கள் கணபதி சிறையில் இருப்பதால் அவருக்கு  ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவரின் பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை கோவையைவிட்டு வெளியேறக் கூடாது, மறு உத்தரவு வரும் வரை தினம் காலை மற்றும் மாலை லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!