வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (08/03/2018)

கடைசி தொடர்பு:18:30 (08/03/2018)

'கிருஷ்ணா நீரின் அளவு குறைந்தது'- சென்னைக்குக் குடிநீர் அபாயம்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு வரும் ஆந்திமாநில கிருஷ்ணாநதி நீரின் அளவு குறைந்து வருவதால் சென்னைக்குக் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

கிருஷ்ணா நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் 2 டி.எம்.சி. அளவிற்குதான் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஜனவரி 1ம் தேதி முதல் கண்டலேறுவிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அணையிலிருந்து படிப்படியாக நீரின் அளவு உயர்த்தப்பட்டு வினாடிக்கு 2450 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 450 கன அடியாக உள்ளது.

தண்ணீர் குறைந்த அளவிற்கு வருவதற்கு காரணம் சத்தியவேடு அருகே தண்ணீர் வரும் கால்வாய் பகுதிகளில் ஆந்திர விவசாயிகள் ஆயில் இன்ஜின்களை வைத்து தண்ணீர் திருடுகின்றனர். இது தொடர்பாக 53 மோட்டார்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர்.

நேற்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டில் வினாடிக்கு 297 கன அடி நீர் வீதமென வந்துகொண்டிருந்தது. கண்டலேறு அணையின் மொத்தக் கொள்ளளவான 68 டி.எம்.சி.யில் தற்போது 7.3 டி.எம்.சி.யாக குறைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் தமிழகத்திற்கு1000 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது