`ஹெச்.ராஜாவை நாடு கடத்துங்கள்!’ - கொந்தளிக்கும் பாரதிராஜா

பெரியார் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜாவை நாடுகடத்த வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ``திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர்
ஈ.வெ.ராமசாமி சிலை'' எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அவரின் பதிவைத் தொடர்ந்து வேலூரில் உள்ள பெரியாரின் சிலை
சேதப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாது தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. ஹெச்.ராஜாவின் பதிவு மற்றும் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பதிவு தொடர்பாக விளக்கமளித்த ஹெச்.ராஜா, `முகநூல் பக்கத்தில் அந்தப் பதிவை, அட்மின் எனது அனுமதியில்லாமல் தவறாகப் பதிவிட்டுள்ளார். அதனால் அந்தப் பதிவை நான் நீக்கிவிட்டேன். இந்தக் கருத்து யாருக்கும் மனவேதனையை ஏற்படுத்தியிருந்தால், நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்’ எனக் கூறியிருந்தார். 

இந்தச் சிலை உடைப்பு சம்பவம் நடைபெற்று 2 தினங்கள் ஆகியும் அதன் மீதான தாக்கம் இன்னும் ஓயவில்லை. ஒவ்வொரு நாளும்
பெரியார் சிலை உடைப்பு தொடர்பாகப் பிரபலங்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது
இயக்குநர் பாரதிராஜா, ஹெச்.ராஜாவுக்கு எதிராகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ``பெரியார் என்பவர் தனி மனிதன் அல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் அடையாளம். இந்த அடையாளத்தை அவமானப்படுத்தும் எதையும் எங்களால் தாங்க முடியாது. மூடநம்பிக்கையை உடைத்து, பெண்ணடிமையை எதிர்த்து போராடிய பெரியாரை வாய் கூசாமல் தேசத் துரோகி எனக் கூறும் ஹெச்.ராஜாவே, நீங்கள் பேசியது பெரியாருக்கு எதிரான பேச்சு அல்ல; ஒட்டுமொத்த தமிழனத்திற்கு எதிரானது. 

பெரியாரின் சிலை, சாதி வெறியர்களின் சிலை இல்லை. ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளம். ஹெச்.ராஜாவுக்கு ஒரு முடிவில்லை என்றால், அவர் தமிழகத்தை கலவர பூமியாக்கிவிடுவார். ராஜா கேட்ட மன்னிப்பை உற்று கவனித்தால் தெரியும், அதில் உண்மை இல்லை என்பது. எனவே ஹெச்.ராஜாவே, எங்கள் மண்ணை விட்டு, நீங்கள் உங்கள் பெட்டி, படுக்கையுடன் உங்கள் மண்ணுக்குப் போய்ச் சேருங்கள். அப்படியென்றால்தான் நாங்கள் எங்கள் மண்ணையும் மொழியையும் தன்மானத்தையும் காப்பாற்ற முடியும். இதுவே உங்களுக்கு அளிக்கப்படும் சிறப்பான தண்டனை’’ என்று பேசியுள்ளார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!