சிறுநீர் கழித்துவிட்டு வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி! - ரூ.15 லட்சத்துடன் ஓட்டம்பிடித்த நண்பன்

சென்னையில் உயிர்த் தோழனிடம் 15,00,000 ரூபாயை அபேஸ் செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

 நண்பன் லோகேஷ்

சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்தவர் குமார். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் குடிநீர் தயாரிப்பு கம்பெனியைத் தொடங்க முடிவு செய்தார். இதற்காக நகைகளை அடகு வைத்தும், விருப்ப ஓய்வு மூலம் கிடைத்த பணம் என 15,00,000 ரூபாயை ஏற்பாடுசெய்தார். கம்பெனி தொடங்குவது குறித்து தன்னுடைய உயிர்த் தோழனான கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த லோகேஷிடம் தெரிவித்துள்ளார். உடனே லோகேஷ், 25 லட்சம் ரூபாயில் கம்பெனி தொடங்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். இதனால், 10 லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கலாம் என்று கூறியுள்ளார்.

 10 லட்சம் ரூபாய் கடன் வாங்குவது தொடர்பாக இருவரும் ஆலோசித்துள்ளனர். அப்போது, லோகேஷ், எனக்குத் தெரிந்த ஃபைனான்ஸியர் ஒருவர் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டில் இருக்கிறார். அவரிடம் 15 லட்சம் ரூபாயைக் காட்டினால் நிச்சயம் 10 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுப்பார் என்று குமாரிடம் லோகேஷ் தெரிவித்துள்ளார். அதை நம்பிய குமார், 15 லட்சம் ரூபாயைத் தன்னுடைய பைக்கின் டேங்க் கவரில் வைத்து அம்பத்தூருக்கு வந்துள்ளார். அங்கே காத்திருந்த லோகேஷும் குமாரும் பைக்கில் ஃபைனான்ஸியரைப் பார்க்கச் சென்றுள்ளனர். பைக்கை குமார் ஓட்டியுள்ளார். அம்பத்தூர் அருகே சென்றபோது இருவரும் சிறுநீர் கழிக்க பைக்கைவிட்டு இறங்கியுள்ளனர். அந்தச் சமயத்தில் லோகேஷ் பைக்கை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குமார், அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் சர்வேஸ்ராஜிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் பொற்கொடி, லோகேஷைத் தேடினார்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

 இதற்கிடையில் கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த லோகேஷ், வீட்டை காலிசெய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால், லோகேஷைப் பிடிப்பதில் சிக்கல் எழுந்தது. இந்தச் சமயத்தில் வீட்டை காலிசெய்ய பயன்படுத்திய லாரி டிரைவரின் விவரம் போலீஸாருக்கு கிடைத்தது. அவரிடம் விசாரித்தபோது, மதுராந்தகத்தில் லோகேஷ் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனால், அங்கு சென்ற போலீஸார் லோகேஷை கைது செய்து, அவரிடமிருந்த 11 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, லோகேஷ் ஆந்திராவில் சட்டம் படித்துள்ளார். நண்பனிடமிருந்து பணத்தைப் பறிக்கத்தான் லோகேஷ் இந்தச் சதித் திட்டத்தைத் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. லோகேஷ், ஷேர் மார்க்கெட்டில் புரோக்கராகப் பணியாற்றுவதும் தெரிந்துள்ளது. மேலும், 15 லட்சம் ரூபாயில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து புதிய காரை வாங்கியுள்ளார். அந்தக்காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயை ஆடம்பரமாகச் செலவழித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

உயிர்த் தோழனின் பணத்தை நண்பனே வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!