வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (08/03/2018)

`நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்' - தூத்துக்குடியில் மகளிர் தினவிழாவில் இரோம் சர்மிளா முழக்கம்

“பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு மட்டும் நாம் போராடாமல்  சமுதாயத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்காகவும் நாம் போராட வேண்டும்” என இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார்.

இரோம் சர்மிளா

மணிப்பூரின்  மனித உரிமைப்போராளி இரோம் சர்மிளா தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "இந்திய ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டத்தை எதிர்த்து நான் மேற்கொண்ட 16 வருட தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நிச்சயம் சமுதாய மாற்றத்துக்கு உதவி செய்யும். பெண்களுக்காக மட்டுமல்லாமல் மனித சமுதாய நன்மைக்காகவும் நாம் உழைக்க வேண்டும்,  போராட வேண்டும். பெண்கள் இன முன்னேற்றத்துக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்களின் முன்னேற்றத்தையும் சமூகக் கடமைகளையும் நினைவுபடுத்துகின்ற நாளாகத்தான் இந்த உலக மகளிர் தினத்தைப் பார்க்கிறேன்.

பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் இன்னும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அடிமைத்தனம்,  பட்டியலின மக்களின் உரிமைகள் மறுத்தல் ஆகியவை தடுக்கப்படுதல் வேண்டும். தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டேதான் உள்ளன என்பதை 'கக்கூஸ்' ஆவணப்படம் மூலம் தெரிந்து கொண்டேன். பஞ்சாலை தொழிற்சாலைகளில் 2 வருட ஒப்பந்தத்தில் ``சுமங்கலி திட்ட”த்தின் கீழ் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.

students

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ராணுவமயமாக்கல் கண்டிக்கத்தக்கது. இதே நிலைதான் மணிப்பூரிலும் உள்ளது. இதே போன்ற மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் சர்வதேச அரங்கில் எடுத்துச் சொல்ல அரசு முன்வர வேண்டும். வரும் மார்ச் 23-ல் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மீறலுக்கு எதிரான மாநாட்டில்  கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தும் என்னால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தேன். ஆனால், தற்போதுவரை எனக்கு பாஸ்போர்ட் தரவில்லை. எனக்கு பாஸ்போர்ட் தருவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொண்டு மனித உரிமை மீறல் குறித்து பேசி விடுவேன் என்பதற்காகவே திட்டமிடப்பட்டு எனக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது மணிப்பூர் காவல்துறை.  

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மட்டுமல்ல, நிலம், நீர், காற்று மாசுபடுதல் சமுதாயத்தில் நடக்கும் அனைத்து தவறுகளையும் அநீதிகளையும் தைரியமாகத் தட்டிக் கேட்க வேண்டும். பெண் என்பவள் சாதிக்கப்பிறந்தவள்" எனப் பேசினார். இரோம் சர்மிளாவின் ஒவ்வொரு பேச்சையும் மாணவிகள் கைதட்டி வரவேற்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க