வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (08/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (08/03/2018)

`காவலர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் தமிழகத்தில் நிலை என்னவாகும்?' - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ஒரு மணி நேரம் காவலர்கள் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்கக்கோரி, வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், '24 மணி நேரமும் பணியிலிருக்கும் காவலர்களுக்கு ஓய்வு தேவை. காவலர்கள் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும்?.

தமிழக காவல்துறையில் 19,000 காலியிடங்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையா?. காலி பங்களாக்கள், சமாதிகளில் தேவையில்லாமல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மன அழுத்தம் அதிகரிப்பதால்தான் காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்கின்றனர். வேலையை விடுகின்றனர். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சாலைகளில் செல்லும்போது, தேவையில்லாமல் காவலர்கள் கால்கடுக்க நிற்க வைக்கப்படுகிறார்கள். ஆறு ஆண்டுகள் ஆகியும் காவலர் ஆணையம் அமைக்கப்படாதது ஏன்?. காவலர் ஆணையம் அமைக்கப்படாததால் தற்கொலை அதிகரித்துவருகிறது. இதுகுறித்து மார்ச் 19-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.