வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (08/03/2018)

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் முதலாவது அணு உலை, பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இரு அணு உலைகளும் நிறுத்தப்பட்டதால் இந்த உலைகளின் மூலமாகத் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 1,124 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

முதல் அணு உலை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உலைகளுக்கான உதிரிப் பாகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்று தரமற்ற உதிரிப் பாகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அத்துடன், கட்டுமானத்திலும் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த நிலையில், இரண்டாவது உலையில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி திடீரென வால்வு பழுது ஏற்பட்டதால், அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டது. அந்தப் பழுதைச் சரிசெய்வதற்காக ரஷ்யாவில் இருந்து விஞ்ஞானிகள் வந்து சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதனால் விரைவில் இரண்டாவது உலை செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், முதலாவது அணுஉலையில் பராமரிப்புக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முழுக் கொள்ளளவான 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி வந்த நிலையில், இந்த உலையின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால்,  இந்த உலையிலும் வால்வு பிரச்னை காரணமாகவே நிறுத்தப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு உலைகளும் நிறுத்தப்பட்டிருப்பதால்,இந்த உலைகளிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 1124 மெகாவாட் மின்சாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .. 

இது குறித்து கருத்து தெரிவித்த அணு சக்தி எதிர்ப்பாளர்கள், ``கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அலகு இன்று காலையில் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டு உள்ளது. பல முறை இதேபோல இந்த உலையில் பழுது ஏற்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்தில் மூன்றாம் தலைமுறைக்கான அணு மின் நிலையம் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது போன்று அடிக்கடி பழுது ஏற்படுவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் முதல் இரு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும். 3, 4, 5 மற்றும் 6 வது அணு உலைகளைத் தொடங்க நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்றார்கள்.