`எம்.ஜி.ஆரையே விமர்சிக்கிறோம்; ரஜினி எம்மாதிரம்'- சொல்கிறார் சுப.உதயகுமாரன்

தமிழர்களை வழிநடத்தும் தகுதி ரஜினிகாந்துக்குக் கிடையாது. நடிக்க வந்த ரஜினி, நடித்து முடித்துவிட்டு அவர் தனது சொந்த இடத்துக்குச் செல்வதுதான் நியாயமான செயலாக இருக்க முடியும் என சுப.உதயகுமாரன் தெரிவித்தார்.

சுப.உதயகுமாரன்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய சுப.உதயகுமாரன் மற்றும் பொது மக்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள். இந்த வழக்கு விசாரணைக்காக அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் உள்ளிட்டோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப.உதயகுமாரன், ’’கூடங்குளம் அணு உலை மீண்டும் மின் உற்பத்தியை நிறுத்தியிருக்கிறது. முதல் இரு அணு உலைகளும் ஆபத்தானவை என்றும் நாங்கள் பல வருடங்களாகச் சொல்லி வருகிறோம். இந்த உலைகளால் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக இரு உலைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும். இந்த இரு உலைகளும் இறந்த பிறந்த குழந்தைகள். உலகின் வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு ஆபத்தான, அடிக்கடி பழுது ஏற்படும் அணு உலைகளைச் செயல்பட அனுமதிக்க மாட்டார்கள். இங்குள்ள பெரிய கட்சிகள், ஆபத்து நிறைந்த இந்த அணு உலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்ச் சமூகத்துக்கு அரசியல் நல்வாழ்வுக்கு எம்.ஜி.ஆரின் பங்களிப்பு எதுவும் கிடையாது. அதனால், நாங்கள் எம்.ஜி.ஆரையே விமர்சிக்கிறோம். இந்த லட்சணத்தில் நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லிக்கொண்டு அவரது ஆட்சியைக் கொண்டுவருவதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் 8 கோடி தமிழர்களையும் வழி நடத்துவதற்கு எந்தத் தகுதியும் திறமையும் இல்லாத நபர். நடிகர் ரஜினிகாந்த், நடிப்புத் தொழிலின் மூலமாக பணம் சம்பாதிப்பதற்கு வந்தவர். அதனால், பணம் சம்பாதித்து விட்டு தனது வீட்டுக்கோ அல்லது நாட்டுக்கோ திரும்பிச் செல்வதுதான் முறையாக இருக்குமே தவிர, ஊர்த் திருவிழாவுக்கு வந்த நாதஸ்வர வித்வான் ஊர்த்தலைவராக முயற்சி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனால் ரஜினி விருப்பப்பட்டால் கர்நாடகாவுக்குச் சென்று அங்குள்ள சிஸ்டத்தை சரிசெய்து கொள்ளட்டும். தமிழக சிஸ்டத்தை சரிசெய்வதற்கு தமிழ் மக்கள் இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!