வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (08/03/2018)

கடைசி தொடர்பு:18:26 (08/03/2018)

`2 ரூபாய் போண்டா..!’ - 80 வயது சின்னபொண்ணு பாட்டியின் 55 ஆண்டு சேவை #WomensDay

சில உணவகங்களில் சாப்பிடும்போதுதான், நம்ம அம்மாகிட்டயோ அல்லது நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க கைப்பக்குவத்துலயோ சாப்பிடுவதுபோல தெரியும். அப்படிப்பட்ட இடங்களுக்கு நாம தினமும் போய் வருவோம்.

ஒருநாள் வேலூர் முத்துரங்கம் கலைக் கல்லூரி, ஓட்டேரி சாலை வழியே சென்றுகொண்டிருந்தோம். முத்துரங்கம் கலைக் கல்லூரியின்  பக்கத்தில் ஒரு கூட்டம் வயது பாகுபாடின்றி கூடியிருந்தனர். சிறியவர் முதல் பெரியவர் வரை பெண்கள், ஆண்கள் என அனைவரும் சுற்றி இருந்தனர். கூட்டம் கூடிவிட்டால் வேடிக்கை பார்ப்பது மனித இயல்புதானே!

``அட, என்னப்பா  கூட்டம்... விலகுங்கப்பா!'' என்று  கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்த்தோம்.  கண்களைக் கவரும் வகையில் சுட சுட போண்டாக்கள்  தட்டில் இருந்தன. கீரை போண்டா, வடை, உருளைக்கிழங்கு போண்டா, மிளகாய் பஜ்ஜி, முட்டை போண்டா என அனைத்தும்  இருக்கின்றன. ருசி இருந்தால்தான் Fans உருவாவார்கள். ருசியும் சுகாதாரமும் இருக்கும் கடைகளில், விலை தாறுமாறாக இருக்கும். `சரி, விலையை விசாரிப்போம்!' என்று விசாரித்தால் இரண்டே ரூபாய்தான்!

வேலூர் பாட்டி

எங்களின் பார்வை, இப்போது போண்டா போடுபவரிடம் திரும்பியது. கடையில் வடை போடும் சின்னப்பொண்ணுவின் வயது 80.  55 வருடங்களாக இந்தத் தொழிலை செய்துவருகிறார். அவருக்கு உதவியாக அவரின் குடும்பத்தினரும் உதவுகின்றனர்.

சில நேரங்களில் எளிமையான மனிதர்கள்தான் வாழ்க்கையில் மிகப்பெரிய தத்துவத்தை போதிக்கிறார்கள். பாட்டியிடம் பேசினோம். 

``பாட்டி  உங்களை பற்றிச்  சொல்லுங்க?''

``என் பேரு சின்னப்பொண்ணு.  வயசு  80.  எனக்கு  மூணு பையன், ரெண்டு பொண்ணு. மூணும் குழந்தைகளாக இருக்கறப்பவே அவர் தவறிட்டார். அப்ப இருந்து பசங்களை நான்தான் வளர்த்தேன். நிறைய வேலை பார்ப்பேன்.  இந்தக் கல்லூரியைக் (முத்துரங்கம்) கட்டும்போது கட்டடவேலை செய்தேன். கல்லூரிக்குப் பக்கத்துலேயே இந்தச் சின்ன இடத்துலதான் எங்க பொழப்பு ஓடுது. இருந்தாலும், இந்த இடத்தை காலிபண்ணச் சொல்லி வெளியே இருந்த சிலர் எங்களை தொந்தரவு பண்ணப்போ, கல்லூரியில இருக்கிற ஒரு வாத்தியார்தான் இந்த இடத்தை எங்களுக்காகப்  பேசி வாங்கிக்கொடுத்தார்.''

``வியாபாரம் எப்படிப் போகுது பாட்டி?''

``வர்ற காசு, வாயிக்கும் வயித்துக்கும்னு அன்றாட தேவையைப் பூர்த்திசெய்றதுக்கே சரியாபோயிடுது. இன்னைக்கு வியாபாரம் ஆகுற காசை, அடுத்த நாள் கீரை காய்கறிகளை வாங்கி வருவதற்காகப் பயன்படுத்திக்குவோம். ஒருநாள் வியாபாரம் ஆகலைன்னாகூட பெரிய இழப்புதான். இதுல பெரிய வருமானம் எல்லாம் ஒண்ணும் கிடையாது.''

``இவ்வளவு மக்கள் கூட்டம் வர என்ன காரணம்?''

``நான் 55 வருஷங்களா இந்தத் தொழிலை செய்றேன். இந்தத் தெருவிலேயே மூணு இடத்துல கடையை மாத்திட்டோம். ஆனா, எல்லோரும் தேடி வந்து வடை, போண்டாவை வாங்கிட்டுப் போறாங்க. சுகாதாரமான முறையில கண் எதிரிலேயே நாங்க தயாரிக்கிறதைப் பார்க்கிறாங்க. தரமும் ருசியும் ஒரு பக்கம் இருந்தாலும், விலைதான் அவங்களை இங்கே தேடி வரவைக்குது.'' 

``விலைவாசி, GST இருந்தும்கூட  நீங்க ஏன் விலையை ஏத்தல?''

``பத்து  வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் ஒரு ரூபாய்க்குத்தான் வித்தோம். சில வருஷங்களுக்கு முன்னாடிதான் ரெண்டு ரூபாய்னு மாத்தினோம். என்ன மாற்றம் வந்தாலும் சரி...  என்ன ஆனாலும் சரி, எங்க கடையில ரெண்டு ரூபாய்தான்'' என்கிறார் பாட்டி. 

வேலூர் பாட்டி

``நான் இறந்துபோயிருந்தா ஒரு வருஷம் ஆகியிருக்கும். போன வருஷம் உடம்பு சரியில்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன். எவ்வளவு,  கஷ்டம் இருந்தாலும் கடைக்கு வந்துடுவேன். உழைச்சுதான் சாப்பிடணும். கடைசி வரைக்கும் அப்படிதான் இருப்பேன்.''

`உன் கையால் சாப்பிடு...  அதையும் உழைத்து சாப்பிடு' என்ற கொள்கைக்கு உதாரணமாக வாழ்ந்துவருகிறார், சின்னப்பொண்ணு பாட்டி. 


டிரெண்டிங் @ விகடன்