உதவி பேராசிரியர் நியமன விவகாரத்தில் சிக்கும் அ.தி.மு.க. எம்.பி?

சென்னை உயர்நீதிமன்றம்

மதுரை வக்பு வாரிய கல்லூரியில் லஞ்சம் வாங்கிக்கொண்டு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் சையது அலி அக்பர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் முத்தவல்லிகள் சார்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். மதுரையில் உள்ள வக்புவாரிய கல்லூரி 11 பேர் கொண்ட நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. வக்பு வாரியத்தின் தலைவரே இந்தக் கல்லூரியின் நிர்வாகக் குழு தலைவராக இருப்பார். தற்போது, வக்பு வாரிய தலைவர் பதவி காலியாக உள்ளது. இதனால் நிர்வாகக்குழு, தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மற்றும் வக்பு வாரியம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் கல்லூரி உள்ளது.

இந்தநிலையில் கடந்த 2017 நவம்பரில் 13 உதவிப் பேராசிரியர்களின் பணியிடங்கள் லட்சம் வாங்கிக்கொண்டு சட்டவிரோதமாக நிரப்பப்பட்டுள்ளன. இதனால் தகுதி வாய்ந்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த 2018 பிப்ரவரியில் மீண்டும் உதவி பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர் பணியிடங்கள் நிரப்ப கல்லூரி நிர்வாகம் நேர்காணல் நடத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உதவிபேராசிரியர் நியமனம் நியாயமான முறையில் நடக்கவேண்டும். அதில் ஊழல் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ரவிச்சந்திரன் முன்பு நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மற்றும் வக்பு வாரிய கல்லூரி நிர்வாக குழு ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.  

கல்லூரி நிர்வாகக்குழுவில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த எம்.பி. ஒருவர் இருக்கிறார். ஏற்கெனவே கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமன லஞ்ச விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. இதிலும், அ.தி.மு.க.வினர் சிக்க வாய்ப்புள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!