`உஷா சொல்லி முடிப்பதற்குள் காமராஜ் எட்டி உதைத்துவிட்டார்!’ - மனைவியை இழந்த ராஜா கண்ணீர்

''என் குடும்பத்தை இப்படி அழிச்சிட்டாரே. அவருக்கும் குடும்பம் இருக்கிறது" என்று உஷாவின் கணவர் ராஜா கண்ணீர் மல்க கூறினார்.
உஷா
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த ராஜா, நேற்று மாலை 7 மணியளவில் தன் 3 மாத கர்ப்பிணி மனைவியைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரது பைக் திருச்சி துவாக்குடி டோல் பிளாசா அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு சோதனைக்கு நின்றுகொண்டிருந்த டிராஃபிக் போலீஸார், அவர்களை மறித்தார்கள். ஓரமாக வண்டியை நிறுத்துவதற்குள், ராஜாவின் சட்டையைப் பிடித்து போலீஸார் இழுத்ததுடன், 7 கிலோ மீட்டர்வரை அவரை துரத்திச் சென்று, திருச்சி  திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதி அருகே அவர்களின் பைக்கை மறித்ததுடன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ், எட்டி உதைத்ததில் ராஜாவும் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
 
இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா பலியானார். அடுத்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் அந்தப் பகுதியில் பரவ அப்பகுதியில்
உள்ள பொதுமக்கள் 5,000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் பலமணி நேரம் நீடித்தது. போராட்டக்காரர்களிடம் திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ், டி.சி சக்திகணேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், கல்வீச்சும், வாகனம், மற்றும் பேருந்துகள் தாக்குதலுக்குள்ளானது. இறுதியில் போலீஸார்,  தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இந்தத் தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர். 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட ராஜா, “பைக்கில் வந்துகொண்டிருந்த எங்களின் பைக்கை, துவாக்குடி டோல் பிளாசா அருகே போலீஸ்காரங்க மறிச்சாங்க. நான் வண்டியை ஓரமாக நிறுத்துவதற்குள் ஒரு போலீஸ்காரர், என் சட்டையைப் பிடித்து இழுத்தாரு. ஒரு குற்றவாளியைப்போல நடத்துறீங்களே எனக் கேட்டேன். அடுத்து என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கால்மணி நேரம் அங்கேயே நிறுத்தி வைத்திருந்தார். அவங்க என்னிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, மற்ற வண்டிகளைப் பிடிக்கும் வேலைகளைச் செய்ததால், அவளை ரோட்டில் நிற்க வைப்பது சரியாக இல்லை என்பதால், கிளம்பிவந்தோம். நாங்கள் ரொம்ப தூரம் வந்துவிட்டோம். அப்போது உஷா, பின்னால் ஒரு போலீஸ்காரர் விரட்டிவருவதாகக் கூறினார். அவள் சொல்லி முடிப்பதற்குள், வேகமாக அந்தப் போலீஸ்காரர் கோபமாக எட்டி உதைத்தார். அடுத்து வண்டி நிறுத்துவதற்குள் மீண்டும் உதைத்தார். இதில் நிலைதடுமாறிய நாங்கள், வண்டியோடு கீழே விழுந்தோம். அதில் இருவருக்கும் பலத்த அடி. உஷாவுக்கு தலையில் அடி. அடுத்து ஆம்புலன்ஸ் வர வைத்து, அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் எங்களை அனுப்பி வைத்தாங்க. துவாக்குடி ஆஸ்பத்திரியில் எனக்கு சிகிச்சையளித்தபோதுதான், உஷா இறந்துட்டானு சொன்னாங்க. அந்தப் போலீஸ்காரருக்கும் குடும்பம் இருக்கும். என் குடும்பத்தை இப்படி அழிச்சிட்டாரே” எனக் கதறினார்.
உஷா கணவர் ராஜா
இந்நிலையில் இறந்துபோன உஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு, மருத்துவர் சரவணன் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது, மக்கள் அதிகாரம், புதிய தமிழகம், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பாவியான உஷா உயிரிழப்புக்குக் காரணமாகப் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ்மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களைப் போலீஸார் செய்யக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். இதனால் திருச்சி மருத்துவமனை வளாகம் பரபரப்பாக உள்ளது. உஷாவையும் உஷாவின் வயிற்றில் இருந்த சிசுவின் மரணத்துக்குக் காரணமான அந்தப் போலீஸ்காரரைத் தூக்கில் போடும் அளவுக்கு வழக்குப்பதிவு செய்யுங்கள் எனப் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!