உஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி..! கமல்ஹாசன் அறிவிப்பு

திருச்சியில் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்தார். 

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'தாய் சொல்லைத் தட்டாதவன் நான். அதனால், நான் இந்த மேடையில் நிற்கிறேன். எனக்கு புடவை கட்டத் தெரியும் என்பதை மீசையை முறுக்கிச் சொல்வேன். பெண்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார்கள். எனக்குப் பெண்களைப் புரிந்துகொள்ளத் தெரியும்.

அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கும் விஷயம் அறிந்தவர்கள் மக்கள் நீதி மய்யத்துக்கு வாருங்கள். தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை. நான், பகுத்தறிவுவாதி என்பதால் ஆன்மிகவாதிகளுக்கு என்னால் பிரச்னை வராது. திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது; நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியைச் செய்துள்ளனர். உஷாவின் குடும்பத்துக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!