வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (08/03/2018)

கடைசி தொடர்பு:21:20 (08/03/2018)

`மகளிர் தினத்தில் எனக்குக் கிடைத்த வெற்றி' - ஹதியா உற்சாகம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மகளிர் தினத்தில் கிடைத்த வெற்றியாகப் பார்ப்பதாக ஹதியா தெரிவித்துள்ளார். 

ஹதியா

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த அசோகன், பொன்னம்மாள் தம்பதியின் ஒரே மகள் அகிலா. அசோகன் தம்பதியினர் இந்து மதத்தில் தீவிர பற்று கொண்டவர்களாக இருந்தார்கள். அகிலா உள்ளூரில் ப்ளஸ் டூ முடித்து விட்டு  2010-ம் ஆண்டு சேலம் சிவராஜ்  ஹோமியோபதி ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் படித்த கேரளா மாநிலத்தை சேர்ந்த சக மாணவிகளான ஜெசீலா மற்றும் அவரது சகோதரி ஃபசீனாவும் அகிலாவிற்கு தோழிகளாக இருந்தார்கள்.

இவர்கள் மூன்று பேரும் சேலத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர். அப்போது ஜெசீலாவும், ஃபசீனாவும் தங்களுடைய இஸ்லாம் கோட்பாடுகள் படி 5 வேளை தொழுகையில் ஈடுபட்டதோடு அவர்கள் இறைவன் மீது வைத்திருந்த நம்பிக்கையும், அவர்களின் நற்குணங்களையும் பார்த்த அகிலாவிற்கு இஸ்லாம் மதத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சட்டபூர்வமாக இஸ்லாம் மதத்திற்கு மாறி அகிலா என்ற தன் பெயரை ஹதியா என்று மாற்றிக்கொண்டார். இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினரும், மனித உரிமை ஆர்வலருமான சைனபா என்பவரின் பாதுகாப்பில் இருந்த ஹதியாவுக்கும் வளைகுடா நாட்டில் பணியாற்றும் ஷஃபின் ஜாஹான் என்ற இளைஞருக்கும் 2016 ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதையடுத்து ஹாதியாவின் தந்தை அசோகன் தன்னுடைய மகளை லவ் ஜிகாத் மூலம் மதம் மாற்றி ஈராக், சிரியா நாடுகளுக்கு அனுப்பி ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி செய்வதாக நீதிமன்றத்தில் மீண்டும் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா ''தன்னிடம் பாஸ்போர்ட் கூட இல்லை. நான் ஐ.எஸ்., இயக்கத்தில் சேர்ந்து வெளிநாடு செல்ல போவதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு இடமில்லை'' என்று கூறினார்.

இந்நிலையில் 19.12.2016 புத்தூர் ஜூம்மா மசூதியில் ஹாதியாவிற்கும் ஷஃபின் ஜஹானுக்கும் திருமணம் நடந்தது.  இத்திருமணத்தை விசாரித்த கிரைம் பிராஞ்ச் போலீஸார் ஷஃபின் ஜஹான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அவர் மீது கிரிமினல் குற்ற வழக்கு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்கள். அதையடுத்து கேரள உயர் நீதிமன்றம்  24.5.2017 அன்று ஹாதியா -ஷஃபின் ஜஹான் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டதோடு ஹாதியாவை அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கும் படியும், ஹாதியாவை யாரும் சந்திக்கக் கூடாது என்றும் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் படியும் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஷஃபின் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதில் ஹதியா, ஷஃபின் ஜஹான் திருமணம் செல்லும் என்றும், அவருக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள ஹதியவிற்கு அனைத்து உரிமைகள் உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது. அதே வேளையில் ஷஃபின் மீது உள்ள கிரிமினல் வழக்கை தேசியப் புலனாய்வு ஏஜென்சி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் ஹாதியாவிடம் பேசுவதற்காக கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்புகொண்ட போது அவர்கள் ஹாதியாவிடம் பேசி விட்டு நம்மிடம் பேசினார்கள். ''இன்று உலக மகளிர் தினத்தில் பெண்ணாகிய ஹாதியாவிற்கு கிடைத்த வெற்றியாகவே இந்தத் தீர்ப்பை கருதுவதாகவும், தீர்ப்பைக் கேட்டு மகிழ்ச்சியடைவதாகவும். மேற்கொண்டு எதுவாக இருந்தாலும், எனது வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவுகள் எடுப்பேன்'' என்று தெரிவித்ததாகக் கூறினார்கள்.