``ஒரு உயிரின் விலை ரூ.7 லட்சம் தானா?’’ – திருச்சி உஷா மறைவு குறித்து சீமான் காட்டம்

உஷாவின் குடும்பத்துக்குத் தமிழக அரசு இழப்பீடாக ரூ,7 லட்சம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த சீமான், ``உஷா உயிரின் விலை ரூ.7 லட்சம்தானா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சீமான்
திருச்சி போலீஸார் வாகனச் சோதனையின் போது தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மனைவி உஷாவுடன் வந்த ராஜாவின் வாகனத்தை மறித்த சம்பவத்தில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் வண்டியை உதைத்ததில், ராஜாவும் அவரின் மனைவி உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், 3 மாத கர்ப்பிணியான உஷா தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இந்நிலையில் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் திரண்டு போலீஸுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த இடம் கலவரமானது. போலீஸார், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். 
வானதி
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உஷாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு அமைப்புகள் இந்தச் சம்பவத்துக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இறந்துபோன உஷாவின் கணவரான ராஜா காயமடைந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரையும், உஷாவின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூற பி.ஜே.பி சார்பில் வானதி சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் வந்து  திருச்சி அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறினர். 
 
இந்நிலையில் உஷாவின் கணவர் ராஜாவை சந்தித்துப் பேசி நலம் விசாரித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “காயம் அடைந்துள்ள ராஜாவுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணத் தொகை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒரு உயிரின் விலை ரூ.7 லட்சம் தானா?. காவல்துறை வாகனத் தணிக்கையில் ஈடுபடுவது ஹெல்மெட் அணிவதற்காக இல்லை; காசு வாங்க மட்டும்தான். குற்றம் செய்த ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, நிரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்தப் பிரச்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அதில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 2 பேர் உள்ளனர். இது காவல்துறையின் அராஜகப் போக்கை காட்டுகிறது” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!