குமரியில் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலி: இரு மாதத்தில் ஓய்வுபெற இருந்த நிலையில் சோகம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக முகாமிட்டு இருந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பணி ஓய்வு பெற இரண்டு மாதமே இருந்த நிலையில் அவர் உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக நிலவும் அசாதார சூழ்நிலையைச் சமாளிக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கன்னியாகுமரிக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

குமரி முனையில் பட்டாலியன் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற இன்ஸ்பெக்டர் தலைமையிலான பட்டாலின படையினர் அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விடுதியில் இருந்தபோது திடீரென மயங்கிச் சரிந்தார். உடனடியாக அவரை போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். 

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடல் உடற்கூறு சோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அதிக பணிச்சுமை காரணமாக அவர்  உயிரிழந்ததாக அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பணிநிறைவு செய்ய இன்னும் இரு மாதங்களே இருந்த நிலையில், மரணம் அடைந்து இருப்பது அவரது உறவினர்களையும் நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!