வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (08/03/2018)

கடைசி தொடர்பு:23:42 (08/03/2018)

பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து சென்ற பிரமாண்ட சரக்கு கப்பல்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்.

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தினைக் கடந்து சென்ற மிகப்பெரிய சரக்கு கப்பலைச் சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்ற பிரமாண்ட சரக்கு கப்பல்

ராமேஸ்வரம் தீவினை நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது பாம்பன் ரயில் பாலம். இந்தப் பாலத்தின் வழியாக நாட்டின் தென் பகுதியில் இருந்து வட பகுதிக்கு கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக ஹெர்சர் தூக்குபாலமும் உள்ளது. முழுவதும் மனித சக்தியின் மூலம் இயக்கப்படும் இந்த ஹெர்சர் பாலம் கப்பல்கள் செல்லும் போது இரண்டாக பிளவுபட்டு வழி ஏற்படுத்தி தரும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக ஆண்டு தோறும் ஏராளமான கப்பல்கள் கடந்து செல்கின்றன. 

பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்ற சரக்கு கப்பல்

வழக்கம் போல் இன்று குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சரக்கு கப்பல் ஒன்று பாம்பன் பாலத்தின் வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்றது. சுமார் 252 அடி நீளமும், 51 அடி அகலமும் கொண்ட இந்தக் கப்பல் கடந்த 5 ஆண்டுகளில் பாம்பன் பாலத்தினை கடந்த மிகப்பெரிய கப்பலாகும். குஜராத் மாநிலத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த சரக்கு கப்பல் சுமார் 850 டன் எடை கொண்டது என தெரிகிறது. 
பாம்பன் பாலத்தின் தூக்கு பாலம் வழியாக கடந்த சென்ற இந்தப் புதிய சரக்கு கப்பலை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன் கை காட்டி வழி அனுப்பி வைத்தனர்.