பெண் காவலர்கள் பிரச்சனைகளை துணிவுடன் சந்திக்க வேண்டும்; நீதிபதி வலியுறுத்தல்

ராமநாதபுரம்  நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரசத்தீர்வு மையத்தில் பெண் காவலர்கள் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் உலக மகளிர் தின விழா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நடைபெற்றது.

பெண் காவலர்கள் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி இந்த முகாமை துவக்கி வைத்து பேசியதாவது, ''உலக அளவிலும், இந்தியாவிலும் பெண்கள் பலரும் பல்வேறு உயர் பதவிகளில் அமர்ந்து அந்தப்பதவிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். பொதுவாக காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் போதும், குற்றவாளிகளைக் கைது செய்யும் போதும் உரிய விசாரணைக்குப் பிறகே கைது செய்ய வேண்டும். முக்கியமாக பெண்களைக் கைது செய்யும் போது அவர்களை முழுவிசாரணைக்கு உட்படுத்தி தவறு எனத் தெரிய வந்தால் மட்டுமே கைது செய்வது நல்லது. பெண் காவலர்கள் சிறை மரணங்கள் நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் கட்டாயமாகும். 

காவல் நிலையங்களுக்கு வருபவர்களிடம் உரிய மரியாதை கொடுத்து அன்பாக அவர்களது குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் பெண்களிடம் எதையாவது வாங்கி வருமாறு கூறக்கூடாது. முக்கியமாக புகார் வருமாறு நடந்து கொள்ளக்கூடாது. மகளிர் காவலர்கள் பணிகளைச் சிறப்பாக செய்ய வேண்டும். பிரச்சினைகள் வரும் போது அதை முறியடிக்கும் தைரியம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். 

பெண்களைப் பாதுகாக்கும் வகையில் 44 வகையான சட்டங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதும் பெண்களை கஷ்டப்படுத்திய அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட நாளே உலக மகளிர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமைகளுக்காக போராடிய உலக முன்னோடிப் பெண்களின் தியாகத்தை நினைத்துப் பார்க்கும் வகையிலும் ஆண்டு தோறும் உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. மகளிர் காவலர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை சேவை மனப்பான்மையுடன் சட்டரீதியாக அணுகி பிரச்சினைகளுக்கு சட்டப்படி தக்க தீர்வு கிடைக்க கடமைகளை சிறப்பாக செய்து உற்சாகத்துடன் பணியாற்றுமாறு'' என்றார். விழாவிற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி எம்.பிரீத்தா, ஏ.டி.எஸ்.பி.எஸ்.வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குற்றவியல் நீதிபதி டி.வி.அணில்குமார் வரவேற்று பேசினார். விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களைச் சேர்ந்த மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், மகளிர் காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!