வெளியிடப்பட்ட நேரம்: 22:04 (08/03/2018)

கடைசி தொடர்பு:22:04 (08/03/2018)

`அய்யாக்கண்ணு கன்னத்தில் அறைந்து செருப்பைத் தூக்கிக் காட்டிய பா.ஜ.க. பெண் நிர்வாகி!’ - திருச்செந்தூரில் பரபரப்பு

திருச்செந்தூரில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நோட்டீஸ் விநியோகம் செய்ததற்கு பா.ஜ.க. மாவட்ட மகளிரணி  செயலாளர் நெல்லையம்மாள், எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இதில் கைகலப்பு ஏற்பட்டு அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் நெல்லையம்மாள். கூட்டத்தில் செருப்பைத் தூக்கி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த 1ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து விழிப்புஉணர்வு பிரசார நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நெல்லை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்த அவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலிருந்து பிரசாரத்தை தொடங்கி, அங்கிருந்து கிராமங்கள் வழியாக திருச்செந்தூர் வந்தனர் விவசாயிகள். திருச்செந்தூரில், ரதவீதிகளில் விழிப்புஉணர்வு பிரசாரத்தை முடித்த பின், சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்த அய்யாக்கண்னு மற்றும் விவசாயிகள். 

கோவிலிலிருந்து வெளியே வந்தவர்கள், சண்முக விலாச மண்டபம் முன்பிருந்தே பக்தர்களிடம் விழிப்புஉணர்வு நோட்டீஸை விநியோகம் செய்தனர். அப்போது, ”பக்தர்களுக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்கக் கூடாது' என ஆவேசத்துடன் பேசினார் பா.ஜ.க. மகளிரணி மாவட்டச் செயலாளர் நெல்லையம்மாள். அப்போது, அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளுக்கும் நெல்லையம்மாளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் நெல்லையம்மாள்.

இதில், மிகுந்த கோபமடைந்த விவசாயிகள், நெல்லையம்மாளை நோக்கி அடிப்பது போல செல்ல விவகாரம் பூதாகரமானது. பதிலுக்கு,  செருப்பைத் தூக்கி காட்டினார் நெல்லையம்மாள். உடனே, அங்கிருந்த பக்தர்கள், இரு தரப்பையும் விலக்கி விட்டனர். இதையடுத்து, விவசாயிகள் பக்தர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் கொடுக்க முயன்றனர். இதனால், கோவில் வளாகம் அரை மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

பின், செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “எங்களது கோரிக்கை சம்பந்தமாக 32 மாவட்டம் முழுவதும் பிரசார நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். பிரதமராவதற்கு முன்பு மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எல்லாக் கோவிலுக்கும் சென்று மோடிக்கு நல்ல புத்தி கொடுக்கச் சொல்லி சாமி கும்பிட்டுக் கொண்டே வருகிறோம். என்னை பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் தாக்கினார். இது எங்களது நடைபயணத்தை வேண்டுமென்றே சீர்குலைக்க பா.ஜ.க செய்யும் செயல்களில் ஒன்று. இதை நான் பொருட்படுத்தவில்லை” என்றார். இந்நிலையில், விவசாயிகள் தன்னைத் தாக்கியதாகக் கூறி நெல்லையம்மாள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அய்யாக்கண்ணுவை பெண் நிர்வாகி தாக்கியதால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது

நீங்க எப்படி பீல் பண்றீங்க