வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (09/03/2018)

கடைசி தொடர்பு:11:12 (09/03/2018)

''டெல்லி காவிரி கூட்டம்..!'' தமிழக அரசை உஷார்படுத்தும் ஸ்டாலின் 

காவிரி

தமிழ்நாடு - கர்நாடகா இடையே நடக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான வழக்கில்,  உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பைவிடவும் 14.5 டி.எம்.சி குறைவாகும். தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த வரும்படி தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வள அமைச்சகம், சில தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இந்த அழைப்பை ஏற்று, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் ஆகியோர், டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று டெல்லி சென்றனர். இவர்களுடன் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, டிஜிபி., ராஜேந்திரன் ஆகியோரும் டெல்லி சென்றனர்.

இந்தக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்பதை தமிழக அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஒரு குழு அமைத்து, நீர் பங்கீட்டை சரியாகத் தர ஏற்பாடுசெய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக உயர் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ள நிலையில், தமிழ அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், '' 9.3.2018ல் டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக அரசின் குழு, கடந்த 22.2.2018 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டவாறு காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைப்பதை வலியுறுத்தும் வகையிலான அணுகுமுறையை மட்டும் மேற்கொள்ள வேண்டும். வேறு எவ்வித இடைக்கால ஏற்பாடு எதிலும், அனைத்துக்கட்சிகள்- விவசாய சங்கங்களின் ஒப்புதலின்றி, சமாதானம்செய்துகொள்ள முயற்சிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று வலியுறுத்தியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க