'தலைகீழாக நின்றாலும் அவர்களால் முடியாது' - ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் களமிறங்கிய நாம் தமிழர் கட்சி!

நாம் தமிழர் கட்சி

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் பதிவை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியினர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

இதுப்பற்றி பேசிய சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தலைவர் பாண்டியராஜன், ''பாரதிய ஜனதா கட்சியின் திட்டம், 'இந்தியா முழுவதையும் இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் அவர்களால் ஒரு கவுன்சிலர் சீட்டுகூட வர முடியாது. இந்த மண் பகுத்தறிவும், இலக்கியச் செரிவும் உடைய மண். இங்கு, மதவாத ஆதிக்கத்திற்கு ஒரு போதும் இடமில்லை.

இதை உணர்ந்த இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பதன் வெளிபாடாக ஹெச்.ராஜா, தமிழர்களையும்  தமிழர்களுக்காக பாடுபட்ட தலைவர்களையும் இழிவு ஏற்படுத்திப் பேசிவருகிறார். அவர்களுடைய வேடம் தமிழ் பிள்ளைகளுக்கு நன்றாகத் தெரியும்.

பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல. ஒரு தத்துவத்தின், சித்தாந்தத்தின் குறியீடாக பார்க்கபடுபவர். பெரியார் இறந்து இவ்வளவு ஆண்டுகள் கடந்தும், ஹெச்.ராஜா போன்ற பாசிச வெறியர்களுக்கு அவருடைய சிலைகூட தடையாக இருக்கிறது என்று கருதியதன் நோக்கத்தால், உடைப்பேன் என்று சொல்லி இருக்கிறார் என்றால், பெரியார் இந்த தமிழ் மக்களுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

எங்களை சாதிய சேற்றிலிருந்து மனிதர்களாக, மானமுள்ளவர்களாக, அறிவுள்ளவர்களாக எல்லோருக்கும் சமமாக எங்களை நடமாட வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரின் கொள்கையைத் தகர்க்க, கருத்தோடு வந்தால் கருத்தோடு மோதலாம், கத்தியோடு வந்தால் கத்தியோடு மோதலாம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!