வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (09/03/2018)

கடைசி தொடர்பு:02:00 (09/03/2018)

''பிறந்த குழந்தைக்கு போலியோ  சொட்டுமருந்து  கொடுக்கலாமா..?'' - என்ன சொல்கிறது அரசு

போலியோ சொட்டு மருந்து

புதியதாய் பிறந்த குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 11-03-2018 அன்று நடைபெற உள்ளது.  தமிழகத்தில் 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணை 28-01-2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடுக்கப்பட்டது. இரண்டாம் தவணை 11-03-2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகளில், சுங்கச் சாவடிகளில், விமான நிலையங்களில் 1652 பயணவழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு 14 வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்'' என்று கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க