வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (09/03/2018)

கடைசி தொடர்பு:02:30 (09/03/2018)

அரசு வாகனம் மோதி மாணவன் உட்பட இருவர் பலி - பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம்!

அரசு வாகனம் மோதியதில் ஒரு பள்ளி மாணவன் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் அருகே நிகழ்ந்துள்ளது. 

விபத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய வட்ட வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ரமேஷ்குமார். இவர் இன்று திருப்பூரில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உடுமலையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்திருக்கிறார். அப்போது அவர் பயணித்த அரசு வாகனம், அம்மாபட்டி பிரிவு என்ற இடத்தை கடக்கும்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சுந்தர்ராஜன் மற்றும் மகேந்திர பூபதி ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு நபரான விஷ்ணு செல்வன் படுகாயத்துடன் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உடுமலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்த மகேந்திரபூபதியையும், விஷ்ணு செல்வனையும் அவர்களது பெரியப்பா சுந்தர்ராஜன் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து அரசு வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் கன்னிமுத்து என்பவரின்மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.