'சண்டை வேண்டாம்... நடனம் ஆடுவோம்..!' இந்தியாமீது சீனாவுக்கு திடீர் பாசம்...

வாங் யி


"சீன டிராகனும் இந்திய யானையும் ஒருவருக்கொருவர் சண்டை போடக் கூடாது. ஒருவருக்கொருவர் நடனம் ஆட வேண்டும்'' என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்னை பல வருடங்களாக இருந்துவருகிறது. திபெத், அருணாச்சலபிரதேசம், காஷ்மீர், டோக்லாம் என்று பல்வேறு பிரச்னைகளில் சீனா மூக்கை நுழைக்கிறது. இதற்கு இந்திய ராணுவம், உரிய பதிலடி கொடுத்துவருகிறது. சீனக் கடல் பகுதி நாடுகளிடம் சீனா நடந்துகொள்ளும் போக்கு, அந்தப் பகுதியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்திவருகிறது. கிழக்காசிய நாடுகளிடையே இந்தியா, தனது உறவை பலப்படுத்திவருவது, சீனாவுக்கு ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய மண்டலத்தில் மட்டுமல்லாது உலக நாடுகளுக்கு இடையேயும் இந்தியாவின் நன்மதிப்பு உயர்ந்துவருவது, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சமீப காலங்களில் நல்லெண்ணத்தை ஏற்படுத்திவருகிறது. 

இந்நிலையில், சீனாவில் வரும் நாடாளுமன்றத் தொடருக்கான வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், ''இந்தியாவும் சீனாவும் தங்கள் மனக் கசப்புகளைக் குறைக்க வேண்டும். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டும். நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அரசியல் நம்பிக்கை இருந்தால், இரு நாடுகளுக்குமிடையிலான நட்பை இமயமலையால்கூட பிரிக்க முடியாது. நமது உறவுகளின் எதிர்காலத்தை எண்ணி இரு நாடுகளும் செயல்பட வேண்டும். சீன டிராகன், இந்திய யானை ஒருவருக்கொருவர் சண்டை போடக் கூடாது. ஒருவருக்கொருவர் நடனம் ஆட வேண்டும். இரு நாடுகளும் ஒன்றுபட்டால், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதற்குப் பதிலாக, பதினொன்றாக மாறும். மனக் கசப்புகளைத் தாண்டி, வேறுபாடுகளைக் களையும்வகையில் நிர்வாகம் செய்ய வேண்டும். இரு நாடுகளுக்கிடையே சில மோதல்கள் இருந்தாலும், இந்தியாவுடன் தொடர்ந்து உறவு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க, நமது சந்தேகங்களை நம்பிக்கையாக மாற்றுவோம்'' என்று கூறினார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!