"ப.சிதம்பரத்தை சி.பி.ஐ கைதுசெய்யும்" - ஹெச்.ராஜா ஆரூடம்!

திரிபுரா மாநிலத்தில், புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டதையடுத்து, பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பதிவிட்டதற்கு, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் வைகோ, ஸ்டாலின், திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

ஹெச் ராஜா

இந்தச் சூழ்நிலையில், தனது சொந்த மாவட்டமான காரைக்குடியில் உள்ள தனது இல்லத்திற்கு ராஜா வந்ததால், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பத்தூரில் தி.மு.க, தி.க-வினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹெச்.ராஜாவுடன் பயணம்செய்த வாகனத்தில் வந்தவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே, தி.மு.க, தி.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், காரைக்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, "ப.சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கார்த்தி சிதம்பரம் ரூ.14, 500 கோடி வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்க முடியாது. தேவைபட்டால் ப.சிதம்பரத்தை கைதுசெய்யும் வேலையை சிபிஐ பார்த்துக்கொள்ளும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் முதல் படிதான், நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டம். அதற்குள் அதை விமர்சனம் செய்வது சரியில்லை. நிச்சயமாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். தமிழக மக்களுக்கு மத்திய அரசு நல்லது செய்யும். தமிழ்நாடும் கர்நாடகமும் எங்களது இரண்டு கண்கள். இதில் வேறுபாடு என்பது கிடையாது. நான்கு மாநில அதிகாரிகளைக் கலந்து ஆலோசனை செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியம் எப்படி அமைப்பது...'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!