''காமராஜ் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவுசெய்யுங்கள்'' - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

திருவெறும்பூர் உஷா மரணத்திற்குக் காரணமான ஆய்வாளர்மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும், என்று சி.பி.ஐ.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

கே பாலகிருஷ்ணன்


இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் நேற்று இரவு ராஜாவும் அவரது மனைவி உஷாவும் தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபொது, துவாக்குடியில் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் காமராஜ், நிறுத்தும்படி கூறியதைக் கவனிக்காமல் சென்றுள்ளனர். அவர்களை ஆறு கிலோ மீட்டர் விரட்டிச்சென்று, கணேசபுரம் சுங்கச்சாவடி அருகில் காமராஜ் எட்டி உதைத்ததில் உஷா கீழே விழுந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். உஷா மூன்று மாதங்களுக்கு முன்புதான் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் இந்தக் கொடுமை நேர்ந்துள்ளது. 

இச்சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள்,  சம்பந்தப்பட்ட ஆய்வாளர் காமராஜை கைதுசெய்து, கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டுமென போராட்டம் நடத்திய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இந்தத் தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. 

உஷா மரணத்திற்குக் காரணமான காவல்துறை ஆய்வாளர்மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவுசெய்து  தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கைதுசெய்யப்பட்ட பொதுமக்கள் அனைவரையும்  நிபந்தனையின்றி விடுதலைசெய்ய வேண்டும் எனவும், உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு சார்பில், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!