``பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் புதுச்சேரி” - சொல்கிறார் கிரண்பேடி!

``இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட புதுச்சேரியில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது” என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பாக, சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், இரவு நேர துப்புரவுப் பணிகளுக்குச் செல்லும் புதுச்சேரி நகராட்சிப் பெண் ஊழியர்களுக்கு, தொப்பி மற்றும் டார்ச் லைட் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரி மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் பெண்களுக்கு 75 சதவிகித சலுகைகளை அரசு வழங்கிவருகிறது. புதுச்சேரியில், பெண்கள் பாதுகாப்பிற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பெண்களுக்கு 33 சதவிகித  இட ஒதுக்கீடு வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

அவரைத் தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ”இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட புதுச்சேரியில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, பெண்களுக்கான குடும்ப வன்முறைகளுக்கு சரியான நீதியும், பாதுகாப்பும் உள்ளது என்பதை பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு அறிவுறுத்த வேண்டும். இந்தப் பணியை அங்காடி ஊழியர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மேற்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் பெண் குழந்தைகளின் படிப்பை நிறுத்த வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!