'ஒளவையார் படம் முன் உறுதிமொழி எடுத்த மாணவிகள்' - கோவில்பட்டியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவிகள், ஒளவையார் உருவப்படத்துக்கு  மலர்தூவி மரியாதைசெய்து மகளிர்தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

மகளிர் தின விழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு வட்டார நூலகம் சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  இவ்விழாவில், பள்ளி மாணவிகள் ஒளவையாரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர். ஆத்திசூடி பாடலும் பாடினர். "பெண்களுக்கு எதிரான அனைத்து செயல்களையும்  தடுத்து நிறுத்துவேன். பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துரைப்பேன்." எனப் பள்ளி மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின், மாணவிகள் அனைவரும் பாரம்பர்ய விளையாட்டான பல்லாங்குழி விளையாடினர்.

மகளிர் தின விழா

”பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கைத்திறன், கணிதத்திறன், பொருள் ஈட்டும் குணம், நினைவாற்றல் அதிகரிக்கிறது. ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது” என பல்லாங்குழி விளையாட்டின் பயன்குறித்து விளக்கம் அளித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவிகளிடம் பேசிய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லா பாய், “நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர்.  பெண்கள் கல்விஅறிவு பெறுவது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். பெண்குழந்தைகள் கல்வி கற்றால் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல் தற்காப்புக் கலைகளையும், சுயதொழில்களையும்  கற்றுக்கொள்ள வேண்டும். காவல்துறை, பத்திரிகைத்துறை, நீதித்துறை போன்ற மதிப்பும், அதிகாரமும் மிக்க துறைகளில் பணிபுரிந்து, சமுதாயத்திற்கு சேவை செய்ய பெண்கள் முன் வர வேண்டும். சாதிக்கப் பிறந்தவர்கள்தான் பெண்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும், அனைத்திலும் சாதனைபுரிவதை இலக்காகக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார். முன்னதாக, 2 ஆசிரியைகளுக்கு நூலக புரவலர் சான்றிதழ்களும்,125 பள்ளி  மாணவிகளுக்கு, நூலக உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!