வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2018)

கடைசி தொடர்பு:07:54 (09/03/2018)

அப்போ வணங்கத்தக்க தெய்வம்... இப்போ குப்பைக் காடு. கௌசிகா நதியின் சோகம்

கோவை, கௌசிகா நதியில் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது.

கௌசிகா நதி

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள குருடிமலை, பொன்னூத்து மலைகளில் உருவாவதுதான், கௌசிகா நதி. இங்கே உருவாகி, வண்ணத்தன்கரை, தாளமடல் பள்ளம், தன்னாசி பள்ளம், பெரும் பள்ளம் போன்ற ஓடைகளை இணைத்துக்கொண்டு, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக திருப்பூர் மாவட்டம், தெக்கலூர், புதுப்பாளையம் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. குறிப்பாக, கோவில்பாளையம் பகுதி, முற்காலத்தில் 'கௌசிகா புரி' என்று அழைக்கப்பட்டது.  நம் முன்னோர்கள் அதை வணங்கத்தக்க நதியாகப் போற்றிவந்தனர். ஆனால், நம் தலைமுறையில் அப்படி ஒரு நதி இருந்ததே பலருக்குத் தெரியாது. மேலும், அந்த நதியை பராமரிப்பே இல்லாமல் காயப்படுத்தி வருகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.

கோவில்பாளையத்தில் கல்யாண மண்டபக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள் ஆகியவை கௌசிகா நதியில்தான் கொட்டப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், அருகிலேயே தூய்மை இந்தியா திட்டத்துக்கான போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்த இடத்தில் குப்பை கொட்டாதீர்கள் எனத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து குப்பை கொட்டும் படலம் அரங்கேறிவருகிறது.

கௌசிகா நதி

இதுகுறித்து கௌசிகா நதி மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறுகையில், “அங்குள்ள மண்டபங்களிலிருந்துதான் அதிக குப்பைகள் கொட்டப்படுகின்றன. இது சம்பந்தமாக கோவில்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் முறையிட்டுள்ளோம். இதையடுத்து, உடனடியாக கள ஆய்வுசெய்த அவர், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும் இணைந்து செயல்பட்டால்தான், நாம் நதியை பழையபடி மீட்க முடியும். மாற்று வசதிகள் உள்ள, மண்டபங்கள், டாஸ்மாக் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்க வேண்டும். மக்களுக்கும் இது குறித்து தொடர் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.