தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்த குழந்தை -விழுப்புரத்தில் நடந்த சோகம்!

புதுச்சேரி-கடலூர் சாலையில் இருக்கும் நைனார் மண்டபத்தைச் சேர்ந்தவர், பாஸ்கர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் இவருக்கும் பவானி என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமடைந்த பவானி, பிரசவத்திற்காக விழுப்புரம் மாவட்டம் கரசூசில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். கடந்த 6 நாள்களுக்கு முன், மருத்துவமனையில் அவருக்கு பெண்குழந்தை பிறந்தது; ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் மிதந்தது.

விழுப்புரம்

உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் பவானி. அங்கு, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென பேச்சு மூச்சற்று குழந்தை மயங்கிவிழுந்தது. பதறித்துடித்த பவானி, சத்தமாகக் கத்தியவாறே உறவினர்களை அழைத்தார். குழந்தையின் நிலையைப் பார்த்த உறவினர்கள் உடனே காரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்க, பாஸ்கருக்கும் பவானிக்கும் உலகமே இருண்டுபோனது. பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு கதறிஅழுத பவானி, மயங்கி விழுந்தார். அதையடுத்து, பிரேதப் பரிசோதனை முடித்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாய்ப்பால் குடிக்கும்போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தை இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தனர் மருத்துவர்கள். பச்சிளங்குழந்தை உயிரிழந்த சம்பவத்தால் அந்தக் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!