வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (09/03/2018)

கடைசி தொடர்பு:12:16 (09/03/2018)

டி.டி.வி.தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன் அணிக்கு, ‘பிரஷர் குக்கர்' சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தினகரன் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 

டி.டி.வி.தினகரன்

தங்கள் அணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கட்சிப் பெயரை வழங்க வேண்டும் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட, ’பிரஷர் குக்கர்’ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் அணியினர் இடைக்கால மனு தாக்கல்செய்தனர். 

உள்ளாட்சித் தேர்தல்களில் சின்னம் ஒதுக்குவது மாநிலத் தேர்தல் ஆணையத்தின் முடிவு. தனி நபராகத் தேர்தலில் போட்டியிடுபவருக்கு குக்கர் சின்னம் அளிக்கலாம். ஆனால், ஒரு அணியாக மட்டும் உள்ளவர்களுக்கு அளிக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதிட்டிருந்தது. மேலும், டி.டி.வி.தினகரனுக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்க ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். 

புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டி.டி.வி., அக்கட்சிக்கு அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று பெயர்களைத் தேர்ந்தெடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில், இன்று டெல்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி.தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், மூன்று கட்சிப் பெயர்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.