ஓரம்கட்டப்படுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்? - அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் பின்னணி

எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் பனிப்போர், முக்கியக் கட்டத்துக்கு வந்துவிட்டதாகக் கூறுகின்றனர் அமைச்சர்கள் தரப்பில். 'அரசு விழாக்களில் பன்னீர்செல்வம் பெயரைப் புறக்கணிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. முதல்வர் சொல்லித்தான் இவ்வாறு நடக்கிறது என ஆதங்கப்பட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் கைவினைஞர்கள் தினவிழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், கைத்தறித்துறை முதன்மைச் செயலர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். "ஆனால், இந்த நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லை. 'என்னுடைய பெயரைப் போடாமல் அச்சடித்தது எந்த வகையில் சரியானது. யார் சொல்லி இவ்வாறெல்லாம் செய்கிறீர்கள்' என அமைச்சர் பெஞ்சமினை அழைத்து பன்னீர்செல்வம் கோபப்பட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த அமைச்சரோ, 'இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார். இதன்பிறகு, முதல்வர் கவனத்துக்கும் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார் ஓ.பி.எஸ். சில சமாதானங்களுக்குப் பிறகு, கைவினைஞர்கள் தின விழாவில் துணை முதல்வர் பங்கேற்றார். 'முதல்வர் சொல்லாமல் இவ்வாறு செய்வதற்கு வாய்ப்பில்லை என ஆதரவாளர்களிடம் குமுறியிருக்கிறார் துணை முதல்வர்' என விவரித்த அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், 

கைவினைஞர்கள் தினவிழா அழைப்பிதழ்

"அணிகள் இணைப்பு நடந்த காலகட்டத்திலிருந்தே இருவருக்குள்ளும் மறைமுக யுத்தம் நடந்துகொண்டுதான் வருகிறது. அரசு விழாக்களில் அவ்வப்போது இது வெளிப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பாக நடந்த ஒரு விழாவில், துணை முதல்வர் பெயரைக் குறிப்பிட அமைச்சர் விஜயபாஸ்கர் மறந்துவிட்டார். இதை நினைவூட்டியதும்தான், துணை முதல்வர் பெயரைச் சொன்னார். இதற்குப் பதிலடியாக, 'எடப்பாடி பழனிசாமி அரசு அமைந்து கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஓர் ஆண்டு கடந்துவிட்டது. இதை வெகுவிமரிசையாகக் கொண்டாட வேண்டும்' என அமைச்சர்கள் விரும்பினர். செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் இதைப் பற்றிப் பேசி வந்தார்.

ஆனால், துணை முதல்வர் தரப்பில் உள்ளவர்களோ, 'அப்படியெல்லாம் நாம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. நடப்பது அம்மா ஆட்சி என்றுதான் மக்கள் மத்தியில் பேசி வருகிறோம். அப்படிப் பார்த்தால் மே மாதம்தான் அம்மா ஆட்சி அமைந்து இரண்டாண்டு நிறைவடைய இருக்கிறது. அதையே ஒரு விழாவாகக் கொண்டாடலாம்' என முட்டுக்கட்டைப் போட்டுவிட்டனர். துணை முதல்வர் தரப்பினரின் உள்நோக்கத்தை உணர்ந்து கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர், கடும்கோபத்தில் உள்ளனர். இதன் ஒருபகுதியாகத்தான் கைவினைஞர்கள் தின விழாவில் துணை முதல்வர் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகள் நடந்தன" என்றார் விரிவாக. 

ஓ.பன்னீர்செல்வம்முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையில் நடக்கும் பனிப்போருக்கு உதாரணமாக, நேற்று நடந்த சம்பவத்தையும் குறிப்பிடுகின்றனர் அ.தி.மு.க-வினர். 'பெரியார் சிலை உடைக்கப்படும்' என பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது குறித்துப் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'பெரியார், தமிழகத்துக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். அப்படிப்பட்ட தலைவரின் சிலையை அகற்ற வேண்டும் என்று சொல்வது கண்டனத்துக்குரியது. எனக்குத் தெரியாமல் உதவியாளர் ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டுவிட்டார் என்று கூறி ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துவிட்டார்’ எனப் பேசினார்.

இதையடுத்துப் பேசிய துணை முதல்வர், 'பெரியார் குறித்து ஹெச்.ராஜா சொன்ன கருத்து கண்டனத்துக்குரியது. உதவியாளர்தான் ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார் என்று கூறுவது அபத்தமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ராஜா பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும். அவரே பல்டியடித்து, ‘நான் பதிவு செய்யவில்லை’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார். இருவரது பேட்டியிலும் உள்ள முரண்பாடு கவனிக்கத்தக்கது. உள்துறையை, முதல்வர்தான் கையில் வைத்திருக்கிறார். 'நடவடிக்கை எடுக்கப்படும்' என துணை முதல்வர் கூறியதை, சில அமைச்சர்கள் ரசிக்கவில்லை எனவும் மேற்கோள் காட்டுகின்றனர். 

'எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டதால், அந்தப் பதவியைத் துணை முதல்வர் எதிர்பார்க்கிறார். அதனால்தான், தனக்குப் பதவிமீது ஆசையில்லை. பிரதமர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே துணை முதல்வராகப் பதவியேற்றேன் எனக் கூறுகிறார்' எனப் பேட்டியளித்திருந்தார் தினகரன். 'தலைமைச் செயலகத்தில் முதல்வரின் வாகனத்தில் பன்னீர்செல்வம் தற்செயலாக ஏற முயன்றதும் இதைத்தான் நினைவுபடுத்துகிறது. அமைச்சர்கள் சிலரின் புறக்கணிப்பும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வியூகங்களும் துணை முதல்வர் தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன' என்ற குரல்களும் கோட்டை வட்டாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!