வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (09/03/2018)

கடைசி தொடர்பு:12:31 (09/03/2018)

`இலக்கு வைத்து போலீஸ் அபராதம் விதிக்கக் கூடாது' - உஷாவுக்கு அஞ்சலி செலுத்திய பின் தமிழிசை காட்டம்

தமிழிசை
''கர்ப்பிணிப் பெண் உஷா மரணம் தொடர்பாக  உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா என்பவரை மறித்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில், பைக்கின் பின்பக்கம் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், மரணமடைந்த உஷாவின் உடலுக்கு தமிழக பி.ஜே.பி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய  தமிழிசை, "காவல்துறையினர் இலக்கு வைத்து அபராதம் விதிக்கக் கூடாது. சட்டம், மக்களைப் பாதுக்காக்கவே இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில், தவறுசெய்த காவலர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினரின் மன அழுத்தம், பணிச்சுமை ஆகியவைகுறித்து தமிழக அரசு ஆய்வுசெய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண் உஷா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த தமிழிசை, "கட்டுப்பாடுகள் விதிப்பது பொதுமக்களின் பாதுகாப்புக்காகத்தான். காவல்துறையினருக்கு அல்ல. காவல்துறை அதிகாரிகள், தங்களை ஆழ்ந்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். திருச்செந்தூர் கோயிலில் துண்டறிக்கை கொடுத்தபோது, பி.ஜே.பி பெண் நிர்வாகியை திட்டிய அய்யாக்கண்ணுமீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் வளாகத்துக்குள் நோட்டீஸ் கொடுக்க அய்யாக்கண்ணுக்கு அனுமதி கொடுத்தது யார்? எனவே, அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் அவர்மீது நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

பா.ஜ.க கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடு விலகியுள்ளாரே என்கிற கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, எந்தக் கட்சி விலகினாலும் எங்கள் கட்சி வலுவான நிலையில்தான் உள்ளது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க