வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (09/03/2018)

கடைசி தொடர்பு:13:06 (09/03/2018)

`உங்கள் வீரத்தை அவர்களிடம் காட்டுங்கள்' - பொங்கிய மாட்டுவண்டித் தொழிலாளர்கள்

''லாரியில் மணல் கடத்துபவர்களை விட்டுவிட்டு, எங்களைப் போன்றவர்களைப் பிடித்து உங்களது வீரத்தைக் காட்டுங்கள்'' என்று மாட்டு வண்டித் தொழிலாளர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள். மாட்டுவண்டிகளில் மணல் எடுக்க தனி குவாரி அமைக்க வலியுறுத்தி, அவர்கள் ஆட்சியரிடம் மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாட்டுவண்டி தொழிலாளர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சிலரிடம் பேசினோம். ''அரியலூர் மற்றும் கடலும் மாவட்டங்களுக்கிடையே அமைந்துள்ளது, வெள்ளாறு. இதில், அரசுக்குச் சொந்தமான மணல் குவாரி செயல்பட்டுவருகிறது. இந்த வெள்ளாற்றிலிருந்து சிறிய அளவிலான பயன்பாட்டிற்காக மாட்டுவண்டிகள்மூலம் மணல் அள்ளப்பட்டுவருகிறது. அரசின் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, போலீஸார் மாட்டுவண்டிகளைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்துவருகின்றனர். இதனால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மாட்டுவண்டி தொழிலாளர்கள்

எனவே, மணல்மாட்டுவண்டிகளுக்குத் தனியாக மணல்குவாரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, செந்துறை பேருந்து நிலையம் அருகில், மாவட்ட வண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், தி.மு.க-வினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க-வினர் பலர், இரவு நேரங்களில் லாரியில் மணல் கடத்துகிறார்கள். ஆற்றின் நடுவில் பொக்லைன் இயந்திரங்களை வைத்து மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, எங்களை போன்றவர்களைப் பிடித்து வழக்குப் போடுகிறார்கள்.

பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டமா? இத்தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். மாட்டுவண்டிகளில் மணல் எடுப்பதற்காகத் தனியாக மணல்குவாரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பல்வேறுவிதமாக போராட்டங்கள் நடத்திவருகிறோம். இதற்குமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எங்களது நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கண்டனத்தைப் பதிவுசெய்தார்கள். இதில், 100-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்'' என்றனர்.