`ஹெச்.ராஜாவை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்' - கொந்தளிக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ

``அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டியவர் ஹெச்.ராஜா'' என்று அ.தி.மு.க கடுமையாக விமர்சித்திருக்கிறது.

ராஜா மீது அதிமுக எம்எல்ஏ காட்டம்

பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா, 'இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமியின் சிலை உடைக்கப்படும்’ என்று பதிவிட்டிருந்தார். அந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் எம்.எல்.ஏ அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க-வின் முன்னணி தலைவரும் பிரதமரின் மேடைப்பேச்சுகளைத் தமிழில் தொகுத்து வழங்கி வருபவருமான ஹெச்.ராஜா தனது முகநூல் பதிவில், தந்தை பெரியார் சிலையை உடைப்போம் என்று வெளியிட்டிருப்பது, திமிர்த்தனம் மிக்க செயலாகும்.

அவரின் ஆணவப் போக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவரின் பொறுப்பற்ற இச்செயலை புதுச்சேரி அ.தி.மு.க  வன்மையாகக் கண்டிக்கிறது. ராஜாவின் இழிவான இச்செயலால், அமைதி தவழும் தமிழகம் இன்று கலவர பூமியாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான கருத்துகளால் பிரிவினையைத் தூண்டி, ஆதரவு தேடும் முயற்சியில் அவர் படுதோல்வி அடைந்துள்ளார். தனக்குத் தெரியாமல் முகநூலில் பதிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். திராவிடத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பெரியாரை சாதி வெறியர் என்று கூறி, அவரின் சிலையை உடைப்போம் என்று கூறியது, தமிழனுக்கு விடுத்த சவாலாகும். தேசியக் கட்சியில் பெரிய பதவியில் இருந்துகொண்டு மலிவு விளம்பரத்துக்காக வன்முறையைத் தூண்டி வருகிறார். ஹெச்.ராஜாமீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்து, அவரை அரசியலிலிருந்தே அப்புறப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!