செல்போனில் விபரீதச் செயலில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்!  அதிர்ந்துபோன போலீஸ்

 ஆசிரியர் அந்தோணிசாமி

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும் ஒருவரின் செல்போனில் ஆபாசப் படங்கள் இருந்ததால், அவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம், பணகுடி நதிப்பாறையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், பணகுடி போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் அந்தோணிசாமி என்பவர், பொது இடத்தில் குளிக்கும் பெண்களை ஆபாசப் படம் எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். போலீஸார், அந்தோணிசாமியிடம் விசாரித்தனர்.  அதோடு, அவரது செல்போனையும் ஆய்வுசெய்தனர். அதில், ஆபாசப் படங்கள் இருந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அந்தோணிசாமி மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமான படங்களை செல்போனில் வைத்திருத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " கடந்த 2014-ம் ஆண்டு, பணகுடியில் உள்ள ஒரு பள்ளியில் அந்தோணிசாமி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிவந்துள்ளார். அப்போது, பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாகவும், அந்தச் சம்பவத்தை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதுதொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும், வீடியோவில் உள்ள மாணவிகளின் நலன்கருதி அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று, 2015-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அந்தோணிசாமிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அங்கிருந்து, பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல்மூலம் வந்துள்ளார். அதன்பிறகு, பொது இடங்களில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தோணிசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைபார்த்த நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். கைதான அந்தோணிக்குத் திருமணமாகி குழந்தையும் உள்ளது'' என்றனர். 

 தமிழ் ஆசிரியரின் தவறான செயல், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!