வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (09/03/2018)

கடைசி தொடர்பு:14:40 (09/03/2018)

ஐ.சி.எஃப் ஊழியர்களின் 'அட்ராசிட்டி' - சென்னை எஸ்.ஐ-க்கு நேர்ந்த கொடூரம் 

 ஐ.சி.எஃப்

சென்னை ஐ.சி.எஃப் ஊழியர்கள் இருவர், செய்த அடாவடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்த இரண்டு ஐ.சி.எஃப் ஊழியர்களைத் தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம், பத்தரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன், ரகு. இவர்கள் இருவரும் சென்னை ஐ.சி.எஃப்பில் ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணியாற்றிவருகின்றனர். சென்னை வில்லிவாக்கம், நாராயண மேஸ்திரி தெருவில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இந்தநிலையில் ஐ.சி.எஃப் பகுதியில் உள்ள ஹோட்டலில் இருவரும் நேற்றிரவு டிபன் சாப்பிட்டுள்ளனர். பிறகு அதற்குரிய பணம் கொடுக்காமல் குடிபோதையிலிருந்த இருவரும் ஹோட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.சி.எஃப் போலீஸ் நிலைய ரோந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகச் சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார் வந்து, சரவணன், ரகு ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது, இருவரும் சேர்ந்து உதயகுமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த ஹோட்டல் ஊழியர்களும் பொதுமக்களும் சேர்ந்து சரவணன், ரகுவை சரமாரியாகத் தாக்கியதோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து இவருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். 
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.