வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (09/03/2018)

கடைசி தொடர்பு:15:20 (09/03/2018)

`ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் உடனே கைதுசெய்க' - போராட்டத்தில் குதித்த மாணவர்கள் ஆவேசம்

தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என ஹெச்.ராஜா சொன்னதற்குக் கண்டனம் தெரிவித்து, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள்

பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஹெச்.ராஜவின் உருவபொம்மையை பெரியார் சிலை அருகே எரித்தும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

 இப்போது, கல்லூரி மாணவர்களும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர். தஞ்சாவூரில், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கல்லூரியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் போராட்டம்

 தமிழக அரசு, ஹெச்.ராஜவை குண்டர் சட்டத்தில் உடனே கைதுசெய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கும் மற்றும் அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இதை தமிழக அரசு செய்யத் தவறினால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுக் கல்லூரி மாணவர்களையும் திரட்டி, பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் பேசினார்கள்.

 கல்லூரி அருகில், புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பெரியார் சிலையை நோக்கி பேரணியாகச் சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கே.குணசீலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க