``சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்"

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஒரு சாலை கச்சேரி ரோடு. இது நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இந்தச் சாலை பகுதியில் உள்ள மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலை பகுதியில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக இதனால் விபத்து எதுவும் ஏற்படவில்லை.

பள்ளம்

நேற்று(8.3.18) மதியம் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ கச்சேரி ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையைக் கடந்த போது திடீரென ஆட்டோவின் பின் பகுதி உள்வாங்கி எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு வந்து பார்த்தபோது அவர் சற்று முன்பு கடந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருப்பதைக் கண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும், பொது மக்களும் உரிய அரசு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை RTO மற்றும் தாசில்தார் பள்ளத்தை ஆய்வு செய்த போது அது 10 அடி ஆழமாகவும் 3 அடி அகலத்திலும் இருப்பது தெரியவந்தது. இது பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளமா என்ற நோக்கில் விசாரணை போய்க்கொண்டிருந்தது. அப்போது JCB  வைத்து பள்ளத்தை இடித்துப் பார்த்த போது அது 20 அடி ஆழம் வரை செல்வது  தெரிந்தது. அதனால் இது பாதாள சாக்கடைக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளம் இல்லை. வேறு எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்ற நோக்கில் விசாரணை செய்து வருகின்றனர். சாலை போடுவோர் பள்ளத்தை சரியாக நிரப்பாமல் மேலே மட்டும் சாலை போட்டுள்ளதால் இந்தப் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பள்ளம்

இந்தப் பள்ளத்தால் விபத்து எதுவும் ஏற்படவில்லை. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ அதிர்ஷ்ட வசமாக தப்பியது. சாலையின் முக்கியப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளத்தால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பீதியில் உள்ளனர். பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் வேலைகள் நடைப்பெற்று வருவதால் வாகன ஓட்டிகள் அவ்வழி தவிர்த்து வேறு வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!