குடியால் விழுந்த குடும்பத்தைத் தாங்கும் மல்லிகா அரசிடம் எதிர்பார்க்கும் உதவி! #ConfidentWomen

மண் மணக்கும் மானாமதுரையில் இறங்கி, கதவுகளுக்கு டிசைன் போடும் மல்லிகா கடை எங்கிருக்கிறது என்று கேட்டாலே, வைகை ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் கடைக்கு அழைத்துச்சென்று விடுகிறார்கள். அப்படித்தான் மல்லிகா கடைக்கு நாமும் சென்றோம். பரமக்குடி அருகே உள்ள பார்த்தீபனூருக்குப் பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டிருந்தவர், நமக்காக நேரம் ஒதுக்கிப் பேசினார். அந்தச் சுறுசுறுப்பான பெண்ணின் வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் சோகம், மனதை கலங்கச் செய்தது.

மல்லிகா


எடுத்த எடுப்பிலே, ''பாழாய்போன பிராந்திக் கடைகளை மூடச்சொல்லுங்க சார். அதனால்தான் என் வாழ்க்கை இப்படி இருக்கு. என் கணவர் நல்லா சம்பாதிக்கிறார். அந்தப் பணமெல்லாம் பிராந்திக் கடைக்குத்தான் போகுது. எனக்கு ரெண்டு ஆம்பள புள்ளைங்க. அதுல ஒருத்தனை ஏற்கெனவே இழந்துட்டேன். இன்னொருத்தன் மூளைவளர்ச்சி இல்லாதவன். என் குடும்பமே சோகத்தைப் போர்த்திட்டிருக்கு. என்னிக்கு வெளிச்சம் கிடைக்கும்னு தெரியாமல் நடைபிணமாக ஓடிட்டிருக்கேன்'' என ஆதங்கத்துடன் பேசிய மல்லிகா தொடர்கிறார்.

 “சிவகங்கை பக்கத்துல இடையமேலூர் எங்களுக்கு பூர்வீகம். வயிற்றுப் பிழைப்புக்காக அப்பா, அம்மா ஆந்திராவுக்குப் போயிட்டாங்க. என்னோடு பிறந்தவங்க ஐந்து பேர். எல்லோரும்மே ஆந்திராவில்தான் படிச்சோம். நான் பத்தாம் வகுப்பு வரைக்கும் தெலுங்குல படிச்சேன். என் தலையெழுத்து சரியில்லைனு சாமி எழுதிட்டார்போல. அக்கா, தம்பிகள் ஆந்திராவுல அரசு வேலையில இருக்காங்க. பணம்தான் முக்கியம்னு உறவுகள் எனக்குப் புரியவெச்சாங்க. நான் காதல் திருமணம் செய்துக்கிட்டு கணவர் ஊருக்கு வந்தேன். பாழாபோன குடியால் என் குடி போச்சு'' என்கிறார் மல்லிகா.

சில வருடங்களுக்கு முன்பு, குடிபோதையில் கணவர்  கார் விபத்தில் சிக்க, சாப்பாட்டுக்கே வழியின்றி நின்றுள்ளது அந்தக் குடும்பம். அந்த நேரத்தில் மல்லிகாவுக்குத் தன்னம்பிக்கை கொடுத்தது, அவர் கற்றிருந்த கைத்தொழில். வீட்டின் தலைவாசல் கதவு மற்றும் ஜன்னல்களுக்கு டிசைன் போட்டுக்கொடுக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்துள்ளார்.

''என் கணவருக்காகவும் மகனுக்காகவும் ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க வாங்கின கடனை இந்த வேலையைச் செஞ்சுதான் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க ஆரம்பிச்சேன். இப்ப தொழில் கொஞ்சம் மந்தமாக இருக்கு. இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. என் இன்னொரு மகனைக் காப்பாத்தணும். பரமக்குடி, பார்த்திபனூரில் கம்ப்யூட்டர் டிசைன் போடும் மரக்கம்பெனியில் மாசம் ஐந்தாயிரம் சம்பளத்துக்கு வேலைக்குப் போறேன். என்னதான் கம்ப்யூட்டர் டிசைன் போட்டாலும், கண், காது, மூக்கு எல்லாம் கையால போட்டால்தான் அழகு'' என்கிற மல்லிகாவுக்கு வெல்டிங் வேலையும் தெரியும்.

மல்லிகா

''ஒருநாளைக்கு ஒரு நிலைக்கதவுக்கு டிசைன் போட்டுக்கொடுத்தாலே, நல்ல கூலி கிடைக்கும். நானே நாலு பேருக்கு வேலை கொடுப்பேன். இன்னைக்கு எல்லாமே கம்ப்யூட்டர் மயமானதுல என் தொழில் முடங்கி இருக்கு. எனக்கு கம்ப்யூட்டர்ல டிசைன் போடவும் தெரியும். வசதி இல்லாததால் கம்ப்யூட்டர் வாங்க முடியலை. மாவட்ட ஆட்சியர் எனக்கு உதவி செஞ்சா சொந்தமா வாங்கி செய்வேன். தமிழக கடனுதவி செஞ்சா நாங்களும் உயர்வோம். மற்றவர்களுக்கு வேலையும் கொடுப்போம்'' என்கிறார்.

மல்லிகாவின் வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் சோகம் பலருக்கும் தெரிவதில்லை. இவரைப் போன்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கடனுதவி வழங்க உத்தரவிடுவாரா? அவரின் வாழ்வில் பொருளாதார மாற்றம் நிகழ்ந்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க அந்த உதவி நிச்சயம் உதவும். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!